பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் எதிர்க்கட்சியான பக்கத்தான் ஹரப்பானுடன் கைகோர்த்துள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் 'பக்கத்தான் பிளஸ்' என்ற புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.
இந்தப் புதிய கூட்டணிக்கு 107 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம் நேற்று தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் தேர்தல் தீர்ப்பை மதிக்கவும் ஊழலை ஒழித்துக் கட்டவும் கூட்டணியின் புதிய எம்பிக்கள் ஒன்று சேர்ந்து செயல்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
பக்கத்தான் பிளஸ் கூட்டணியில் இடம்பெற்ற பெரும்பாலான உறுப்பினர்கள், பக்கத்தான் ஹரப்பானைச் சேர்ந்த 91 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவர்.
பக்கத்தான் ஹரப்பானில் மூன்று கட்சிகள் கூட்டு சேர்ந்துள்ளன. கெஅடிலான் ரக்யாட் கட்சி, ஜனநாயக செயல் கட்சி, தேசிய அமானா கட்சி ஆகியவை அந்த மூன்று கட்சிகளாகும்.
மூன்று கட்சிகளை உள்ளடக்கிய பக்கத்தான் ஹரப்பானுக்கு அன்வார் இப்ராஹிம் தலைமை வகிக்கிறார். இவர், கெஅடிலான் கட்சியின் தலைவராகவும் இருக் கிறார். மேலும் அதிகாரபூர்வ எதிர்க்கட்சித் தலைவராகவும் அன்வார் உள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று நேற்று ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில் அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.
செவ்வாய்க்கிழமை தமது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் டாக்டர் மகாதீர் உட்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றதாகவும் அவர் சொன்னார்.
"நாம் அனைவரும் ஒன்றுகூடி கருத்திணக்கம் கண்டுள்ளோம். நமது உத்திகள் வெவ்வேறாக இருந்தாலும் இணைந்து செயல்பட வேண்டும். இதில் உறுப்பினர்கள் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்," என்று மேலும் அவர் சொன்னார்.
"கொவிட்-19 கிருமிப் பரவலால் வீழ்ந்து கிடக்கும் பொருளியலை மீட்டெடுக்க பிரதமர் முகைதீன் அரசாங்கம், 35 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தேசிய பொருளியல் மீட்புத் திட்டத்தை அறிவித்துள்ளது.
"ஆனால் பொருளியலைத் தூண்டும் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை. இது பற்றி கேள்விகேட்க எம்பிக்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. விவாதமே இல்லாமல் பல பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கும் ஒரே நாடு உலகில் மலேசியாவாகத்தான் இருக்கும். வரும் மாதங்களில் பொருளி யலை மேலும் பாதிக்கும் விவகாரங்களுக்கு விரைவில் அரசாங்கம் தீர்வு காண வேண்டும்," என்று அன்வார் தெரிவித்தார்.

