அமெரிக்காவில் இரண்டு மில்லியன் பேருக்கு மேல் கிருமித்தொற்று; இரண்டாம் அலை அபாயம்

அமெரிக்காவில் இரண்டு மில்லியன் பேருக்கு மேல் கிருமித்தொற்று; இரண்டாம் அலை அபாயம்

2 mins read
d8b62b58-a856-4b1d-8f8f-19654d7e447c
டெக்சசிலும் வடக்கு கேரோலினாவிலும் ஒரு மாதத்திற்கு முன்பிருந்ததைக் காட்டிலும் இப்போது அதிகமான கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், கலிஃபோர்னியா, ஃபுளோரிடா, அரிசோனா, வாஷிங்டன் உள்ளிட்ட மேலும் 18 மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

அமெரிக்காவில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு மில்லியனைக் கடந்துவிட்டதாக அந்நாட்டின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

கொரோனா தொற்றால் அமெரிக்காவில் இதுவரை 2,000,464 பேர் பாதிக்கப்பட்டுவிட்டதாகவும் 112,924 பேர் மாண்டுவிட்டதாகவும் அந்தப் புள்ளிவிவரம் கூறுகிறது.

அந்தப் பல்கலைக்கழகத்தின் தரவுத்தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி அந்நாட்டில் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியது.

ஒவ்வொரு நாளும் அங்கு புதிதாக கிட்டத்தட்ட 20,000 பேரை கொரோனா கிருமி தொற்றி வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது.

அதனால், புதிதாகக் கிருமி தொற்றுவோர் எண்ணிக்கையை 20,000 என்ற நிலையில் இருந்து குறைக்க அந்த நாடு தடுமாறி வருகிறது.

அமெரிக்காவில் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 500,000 கிருமித்தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தலைக் கணக்கு விகிதத்தில் பார்க்கும்போது உலகிலேயே அங்குதான் அதிகளவில் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

இதனிடையே, அமெரிக்காவில் கொரோனா தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் 200,000ஆக உயரலாம் என்று ஹார்வர்ட் குளோபல் சுகாதார நிலையத்தின் தலைவர் டாக்டர் ஆஷிஷ் ஜா தெரிவித்திருக்கிறார்.

அதே வேளையில், செப்டம்பரில் கொரோனா நோய்ப் பரவல் முடிவிற்கு வந்துவிடாது என்ற அவர், அடுத்து வரும் வாரங்களில், மாதங்களில் நாடு எந்த நிலையில் இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கும்போது கவலையாக இருக்கிறது என்றும் சொன்னார்.

மசசூசட்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட 11 நோய்த்தொற்றியல் ஆய்வு மாதிரிகளின் சராசரிப்படி, அமெரிக்காவின் சுதந்திர நாளான ஜூலை 4ஆம் தேதிவாக்கில் அங்கு கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 130,000ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்