'கொவிட்-19 பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன'

'கொவிட்-19 பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன'

1 mins read
52867070-7b32-4121-97ed-bfee22c9f286
-

பிரசல்ஸ்: சீனாவும் ரஷ்யாவும் கொவிட்-19 தொடர்பில் தவறான தகவல்களை இணையத்தில் வெளியிட்டதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது.

நேற்று முன்தினம் வெளி யிடப்பட்ட அறிக்கையில், இரு நாடுகளும் தங்களின் சுய லாப நோக்கத்திற்காக கொவிட்-19 நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதன் தொடர்பில் நடவடிக்கை எடுக்காவிட்டால் அது ஆபத்தில் முடிந்துவிடும் என்று செய்தியாளர்களிடம் கூறினார் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் துணைத் தலைவர் வெரா ஜொரோவா.

சீனா கொரோனா கிருமித்தொற்று தொடர்பிலான பழியைத் திசைதிருப்பி கிருமிக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளை முதன்மைப்படுத்தி வருவதற்கான ஆதாரம் உள்ளதென ஆணையத்தின் ஆய்வு கண்டறிந்துள்ளது.

பொய்த் தகவல்கள் கடுமையான தீங்கை இழைக்கலாம் என்றும் மக்கள் அதனால் பலியாகலாம் என்றும் கொவிட்-19 சூழலின் வழி அறிந்துகொண்டதாக திருவாட்டி ஜொரோவா கூறினார்.

அரசாங்கத்தின் செயல்பாடுகளை வலிவற்றதாக்கும் விதமாகவும் இந்தப் பொய்த் தகவல்கள் அமையலாம். மேலும் கிருமிப் பரவலுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளை வலுவிழக்கச் செய்திடலாம்.

கடந்த சில மாதங்களாகவே சமூக ஊடகங்களில் கிருமி, தடுப்பூசி மருந்து, குணப்படுத்தும் மருந்து ஆகியவற்றின் தொடர்பில் வெளியிடப்படும் தவறான கருத்து களைத் தவிர்த்திட ஒன்றியத்தின் ஆணையம் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இணையத்தில் நடப்பதையும் தவறான தகவல்கள் எங்கிருந்து வருகின்றன என்பதையும் வெளிப்படைத்தன்மையுடன் இணையத்தளங்கள் கையாள்வதில் முக்கிய பங்கு ஆற்றுகின்றன.

இதன் தொடர்பில் டுவிட்டர், ஃபேஸ்புக், கூகல் உட்பட்ட ஐந்து தொழில்நுட்ப ஜாம்பவான்கள், பொய்த் தகவல்கள் தொடர்பான நடத்தைக் கோட்பாட்டைப் பின்பற்ற ஒப்பந்தம் செய்துள்ளன.