உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் ஆக அதிகமான கொவிட்-19 மரணங்களைப் பதிவுசெய்துள்ள நாடாக பிரேசில் விளங்குகிறது. மக்கள்தொகை 212 மில்லியன் பேரைக் கொண்டுள்ள அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 909 பேர் கொவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தனர். அவர்களையும் சேர்த்து பிரேசிலில் கொவிட்-19க்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41,828ஆக உயர்ந்துள்ளது.
கொவிட்-19 மரணங்களைப் பொறுத்தவரையில், பிரிட்டனை பிரேசில் முந்திவிட்டது. லத்தீன் அமெரிக்காவின் ஆகப் பெரிய பொருளியல் நாடான பிரேசிலில் கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 828,810ஆக உள்ளது. எனினும், பதிவுசெய்யப்பட்டுள்ள எண்ணிக்கையைவிட மேலும் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்றியிருக்கலாம் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
கொவிட்-19 நோய் பரவும் புதிய மையப் பகுதியாக பிரேசில் உருவெடுத்துள்ளது. ஆனால், அந்நாட்டு அதிபர் ஜேர் பொல்சொனாரோ, கொவிட்-19 நோயை "சாதாரண சளி" என தட்டிக் கழித்துள்ளார். நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக முடக்கநிலையை அமல்படுத்திய மாநில அதிகாரிகள் மீது அவர் கோபம் கொண்டுள்ளார். மத்திய மற்றும் தென்னமெரிக்காவில் கொவிட்-19 நோய்த்தொற்றால் 1.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 70,000க்கு மேலானோர் உயிரிழந்துவிட்டனர். அப்படி இருந்தும், அப்பகுதியில் நோய்ப் பரவல் இன்னும் மெதுவடைவதாக இல்லை.

