உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்து கொவிட்-19 அபாயத்தை அதிகரிக்காது: ஆய்வு

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்து கொவிட்-19 அபாயத்தை அதிகரிக்காது: ஆய்வு

1 mins read
d9b301c4-baa6-4924-8720-b66eabdfb5f7
உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் இரு மருந்து வகைகளை உட்கொள்வதால் கொவிட்-19 தொற்றுவதற்கான அபாயம் அதிகரிப்பதற்கான ஆதாரம் இல்லை என்று புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. கோப்புப்படம்: எஸ்டி -

மேரிலாந்து: உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மருந்துகளை உட்கொள்வது கொவிட்-19 தொற்றுவதற்கான அபாயத்தை அதிகரிக்காது எனப் புதிய ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மில்லியன் கணக்கானோருக்கு நிம்மதி அளிக்கும் விதமாக இந்த ஆய்வின் முடிவுகள் அமைகின்றன.

கொவிட்-19 நோய்த்தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 65 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களில் 72 விழுக்காட்டினருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக அமெரிக்க தொற்றுநோய் கட்டுப்பாடு, தடுப்பு நிலையங்கள் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தது.

அதையடுத்து, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் இரு மருந்து வகைகள் சுகாதாரத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தன.

கொவிட்-19 அபாயங்கள் குறித்து நன்கு அறியப்படும் வரை உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகளைச் சில நோயாளிகள் உட்கொள்ள வேண்டாம் என்று ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பரிந்துரைத்திருந்தனர். மற்றொரு புறம், இந்த மருந்துகளை நோயாளிகள் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும் என வேறு சில ஆய்வாளர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் இரு மருந்து வகைகளை உட்கொள்வதால் கொவிட்-19 தொற்றுவதற்கான அபாயம் அதிகரிப்பதற்கான ஆதாரம் இல்லை என்று புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.

கொவிட்-19 தொற்றைத் தவிர்ப்பதற்காக வேண்டி, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகளை நிறுத்த வேண்டாம் என்று கலிஃபோர்னியா, லாஸ் ஏஞ்சலிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் மார்க் சர்ச்சர்ட் அறிவுறுத்தியுள்ளார்.