மலேசியா: அன்றாட கொவிட்-19 அறிவிப்பு இனி இல்லை

மலேசியா: அன்றாட கொவிட்-19 அறிவிப்பு இனி இல்லை

1 mins read
b084b913-abbd-411b-8060-fefa827b73cc
மலேசியாவில் கொரோனா நெருக்கடியால் மூடப்பட்டிருக்கும் காலைநேரச் சந்தைகள், இரவுச் சந்தைகள், பொதுச் சந்தைகள் ஜூன் 15ஆம் தேதி செயல்படத் தொடங்கும் என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் கூறினார். படம்: ஏஎப்பி -

கோலாலம்பூர்: மலேசியாவில் மூன்று மாதங்களுக்குப் பிறகு கிருமித்தொற்று சம்பவங்கள் குறைந்து

வரும் நிலையில், சமூக ஊடகங்களில் அன்றாடம் நேரடியாக ஒளிபரப்பாகி வந்த கொவிட்-19 பாதுகாப்பு மற்றும் சுகாதார விளக்க சந்திப்பை நிறுத்த அந்நாடு முடிவு செய்துள்ளது.

கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தற்காப்பு மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பும் கிருமித்தொற்று நிலவரம் குறித்து சுகாதார அமைச்சின் இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லாவும் அன்றாடம் விளக்கம் அளித்து வந்தனர்.

இந்த விளக்கக் கூட்டம் இன்று முதல் வாரத்திற்கு மூன்று நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த விளக்கக் கூட்டம் இருக்கும் என நேற்று புத்ரஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய போது இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

இதற்குப் பிறகு இனிமேல் வண்ணமயமான பாத்தேக் சட்டையை காட்சி இருக்காது என இஸ்மாயில் சப்ரி செய்தியாளர்களிடம் நகைச்சுவையுடன் கூறினார்.

செய்தியாளர் கூட்டத்திற்கு அவர் அணிந்துவரும் பாத்தேக் சட்டை குறித்து சமுக வலைத்தளங்களில் பரவலான மீம்ஸ் வெளியானதைச் சுட்டிக்காட்டும் வகையில் அவரது நகைச்சுவை இருந்தது.

இதற்கிடையே, கிருமித்தொற்று நிலவரம் குறித்து அன்றாட அறிக்கை வெளியிடப்படும் என்று மலேசியாவின் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

மலேசியாவில் நேற்று புதிதாக எட்டு பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் ஒருவர் மாண்டதாகவும் நேற்று மாலை கடைசியாக நடந்த அன்றாட விளக்கக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட் டது.

மலேசியாவில் மொத்தம் 8,453 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 121 பேர் பலியாகினர்.