வங்கியில் பணம் எடுக்க 100 வயது தாயைக் கட்டிலோடு இழுத்துச் சென்றார்

வங்கியில் பணம் எடுக்க 100 வயது தாயைக் கட்டிலோடு இழுத்துச் சென்றார்

1 mins read
8702f021-3808-4aea-bf3f-7716c6a769ac
வங்கி வரை தாயாரைக் கட்டிலில் இழுத்துச் சென்ற மகள். காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம் -

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மாதம் 500 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று இந்திய அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில், உதவித் தொகை பெறுபவர்களில் ஒடிசா மாநிலம் நவுபாரா மாவட்டம் பர்கோன் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி லாபே பாகல் என்பவரும் ஒருவர்.

இந்தப் பணத்தைப் பெற மூதாட்டியை நேரில் அழைத்துவர வங்கி மேலாளர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் 100 வயது தாண்டிய அந்த மூதாட்டி படுத்திருக்கும் நிலையில் அவரது மகள் கட்டிலோடு இழுத்துச் சென்றார்.

வங்கி வரை கட்டிலை இழுத்துச் சென்ற பின்னர் வங்கியில் பணம் எடுக்க மூதாட்டிக்கு அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. அந்தப் பெண் தமது தாயை வீதிகளில் கட்டிலோடு சிரமத்துடன் இழுத்துச் செல்லும் காணொளிப் படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பி உள்ளது.

வங்கி மேலாளர் அந்த மூதாட்டியின் வீட்டுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் அதற்குள் அவரது மகள் அந்த மூதாட்டியைத் தள்ளிக்கொண்டு வந்துவிட்டதாகவும் மாவட்ட ஆட்சியாளர் பின்னர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்