கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலத்தை ஆட்சி செய்யும் வாரிசான் சாபா கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கும் அப்கோ கட்சியை சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.
சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் என்கிற முறையில் மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியை ஆதரிக்கப்போவதாக அவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.
பெரிக்காத்தான் கூட்டணி அரசாங்கத்தை ஆதரிப்பதுதான் கெட்டிக்காரத்தனம் என்று கோலா பென்யு சட்டமன்ற உறுப்பினர் லிமுஸ் ஜுரியும் சுகுட் சட்டமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் ராட்டிப்பும் தெரிவித்தனர்.
"அப்கோ கட்சியிலிருந்து விலகி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியை ஆதரிக்க யாரும் எங்களுக்கு நெருக்குதல் அளிக்கவில்லை. இது நாங்களாகவே எடுத்துள்ள முடிவு," என்றார் திரு லிமுஸ். அப்கோ கட்சியிலிருந்து விலகப்போவதில்லை என்று அவர் அண்மையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சி ஆட்சி புரியும் மாநிலமாக இருப்பதைவிட ஆளும் கட்சி ஆட்சி செய்யும் மாநிலமாக இருந்தால் சாபாவுக்கு நல்லது என்று அவர் கூறினார். இந்தக் கருத்தையே திரு ஜேம்ஸ் கூறினார்.
சாபாவின் முன்னாள் முதல்வர் முசா அமானுக்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் அவரை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக திரு ஜேம்ஸ் தெரிவித்தார். சாபாவின் ஆளும் கூட்டணியிலிருந்து மேலும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்த சில நாட்களில் கட்சி தாவுவர் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
இந்த இரு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவினாலும் முதல்வர் முகம்மது ஷஃபி அப்டால் தொடர்ந்து வலிமைமிக்க நிலையில் இருக்கிறார்.
அவரது கூட்டணி சாபா சட்டமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டுள்ளது.

