கொரோனா கிருமி முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக அறிவித்து, எல்லைக் கட்டுப்பாடுகள் தவிர அனைத்து நடவடிக்கைகளும் அனுமதி அளித்திருந்தது நியூசிலாந்து.
தொடர்ந்து 24 நாட்களாக கொரோனா தொற்று இல்லாததால் அங்கு ஊரடங்கு நீக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினர்.
இந்நிலையில், இன்று (ஜூன் 16) அங்கு இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பேரும் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியவர்கள்.
வெல்லிங்டனில் மரணப் படுக்கையில் இருந்த பெற்றோரைப் பார்த்துவிட்டுத் திரும்பிய அவர்கள் இருவரும் 30, 40களில் இருக்கும் பெண்கள்.
பிரிட்டனிலிருந்து இம்மாதம் 7ஆம் தேதி தோஹா, பிரிஸ்பேன் வழியாக அவர்கள் நியூசிலாந்து வந்தடைந்தனர்.
அவர்கள் இருவரும் தற்போது தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். நியூசிலாந்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளான இருவரையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பும் நியூசிலாந்து மக்கள், வெளிநாடுகளிலிருந்து குறிப்பிட்ட சில காரணங்களுக்காக அங்கு வருவோர் ஆகியோர் மூலம் கிருமித்தொற்று மீண்டும் ஏற்படும் அபாயம் இருப்பதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கூறியுள்ளார்.
அண்மைய சம்பவங்களையும் சேர்த்து நியூசிலாந்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,506 ஆகியுள்ளது; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

