விசாரணை என்கிறது பாகிஸ்தான்; கடத்தல் என்று கொந்தளிக்கும் இந்தியா

3 mins read
6957e0a4-fe4b-477c-9f4c-1fdf6ec8f1d8
பாகிஸ்தானில் இருந்து அகதியாக இந்தியாவுக்கு வந்த ஒருவர், புதுடெல்லியில் 'இயர்ஃபோன்', 'ஹெட்ஃபோன்' உள்ளிட்ட மின்னியல் பொருட்களை தெருத்தெருவாகச் சென்று கூவி விற்கிறார். படம்: ராய்ட்டர்ஸ் -

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த இருவர் காணாமல் போய்விட்டதாக நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அவர்கள் இருவரும் பாகிஸ்தானிய அதிகாரிகளால் கடத்தப்பட்டதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.

அவர்கள் இருவரும் தூதரகத்தில் ஓட்டுநர்களாகப் பணியாற்றி வருவதாக இந்தியா தெரிவித்தது.

அதிகாரபூர்வ பணி நிமித்தம் வெளியே சென்றிருந்தபோது கடத்தப்பட்டதாக இந்தியா கூறியது.

இந்தியத் தூதரகத்துக்கு அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் நேற்று முன்தினம் காலை அவர்கள் இருவரையும் ஆயுதம் ஏந்திய 15 முதல் 16 பாகிஸ்தானிய அதிகாரிகள் பிடித்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரின் கண்களைக் கட்டி, கைகளில் விலங்கை மாட்டி பாகிஸ்தானிய அதிகாரிகள் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இருவரிடமும் பாகிஸ்தானிய அதிகாரிகள் பல மணி நேரத்துக்கு விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இருவரிடமும் சாலை விபத்து தொடர்பாக விசாரணை நடத்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

விசாரணைக்காக ஓட்டுநர்கள் எங்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

விசாரணையைக் காணொளி எடுத்த பாகிஸ்தானிய அதிகாரிகள், சாலை விபத்துக்கு தாங்கள்தான் காரணம் என இந்தியத் தூதரக ஓட்டுநர்களை ஒப்புக்கொள்ள பலவந்தப்படுத்தியதாக இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது.

இந்தியத் தூதரகத்தில் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொள்ள வெளியிலிருந்து சிலரைத் தூதரகத்துக்குள் அழைத்து இந்திய உளவுத்துறையினர் இந்த இரு ஓட்டுநர்களையும் பணித்ததாகக் கூறி இதனையும் ஒப்புக்கொள்ள அவர்களை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

"இந்தியத் தூதரக ஓட்டுநர்கள் இருவரிடம் பல மணி நேரத்துக்கு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்களைப் பாகிஸ்தானிய அதிகாரிகள் தொடர்ந்து உலோக கம்புகளால் அடித்துத் துன்புறுத்தினர். அவர்களைப் பலமுறை குத்தினர். அசுத்தமான தண்ணீரைக் குடிக்க வைத்தனர். இந்தியத் தூதரகத்தில் உள்ள உயர் அதி

காரிகளிலிருந்து கடைநிலை அதிகாரிகளின் பொறுப்புகள் குறித்து இருவரிடமும் கேட்டு சித்ரவதை செய்தனர்," என இந்தியா கூறியது. இந்தியத் தூதரகரத்தைச் சேர்ந்த மற்றவர்களும் இனி இதைப் போன்ற சித்ரவதைகளை அனுபவிப்பர் என்று கூறி பாகிஸ்தானிய அதிகாரிகள் தமது தூதரக ஓட்டுநர்களை மிரட்டியதாக இந்தியா தெரிவித்தது.

பல மணி நேரம் கழித்து விடுவிக்கப்பட்ட தமது தூதரக ஓட்டுநர்களை மருத்துவப் பரிசோதனைக்கு இந்தியா அனுப்பியது. அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் தரப்பிலிருந்து வேறொரு கதை வெளியாகி உள்ளது. அந்த இரு இந்திய அதிகாரிகளும் சாலை விபத்து ஒன்றுக்குக் காரணமாக இருந்ததாக அது கூறியது. விபத்து நிகழ்ந்ததை அடுத்து, இருவரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றதாக அது கூறியது.

அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை மடக்கிப் பிடித்ததாக தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ந்ததாகக் கூறப்படும் சாலை விபத்து குறித்து பாகிஸ்தானிய ஊடகம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தகவலை வெளியிட்டுள்ளன. அவை அனைத்தும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதாக இந்தியா கூறியது.

இந்தியாவில் வேவு பார்த்ததற்கான இந்தியாவில் உள்ள பாகிஸ்தானிய தூதரகத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகளை இந்தியா பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பியது. அதற்குப் பழி தீர்க்கும் வகையில் தற்போது பாகிஸ்தான் இந்த இரு இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு வலை விரித்துள்ளதாக இந்திய அரசாங்கம் கூறுகிறது.

பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் அந்த இரு இந்தியத் தூதரக ஓட்டுநர்களின் பாதுகாப்புக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது.

இருவரையும் அவர்கள் ஓட்டிச் சென்ற தூதரக காரையும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பிவைக்கும்படி பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.