கோலாலம்பூர்: மலேசியப் பொருளியலுக்கான மூத்த அமைச்சரான திரு அஸ்மின் அலியும் அவரது ஆதரவாளர்களும் புதிதாக அமைக்கப்பட இருக்கும் அரசியல் கட்சியில் இணையவிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கட்சிக்கு 55 வயது திரு அஸ்மின் அலி தலைமை தாங்குவார் என்று நம்பப்படுகிறது. பல ஆண்டுகளாக கெஅடிலான் கட்சித் தலைவர் திரு அன்வார் இப்ராஹிமுடன் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக திரு அஸ்மின் அக்கட்சியிலிருந்து விலகினார். அவருடன் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கெஅடிலான் கட்சியிலிருந்து விலகினர்.
திரு அஸ்மின் கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய கட்சியைப் பதிவு செய்வதில் திரு அஸ்மினுக்குச் சிறு பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக தி ஸ்டார் நாளிதழின் இணையப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
திரு முகைதீன் தலைமையிலான பெர்சத்து கட்சியில் இணைய சமர்ப்பிக்கப்பட்டுள்ள தங்களது விண்ணப்பங்கள் இன்னும் நிலுவையில் இருப்பதால் புதிய கட்சியை அமைக்க முடிவு செய்துள்ளதாக திரு அஸ்மின் தெரிவித்துள்ளார்.

