சோல்: அதிகரித்து வரும் இருதரப்பு பதற்றங்களைத் தணிக்க சிறப்பு தூதர்களை அனுப்புவதாக கூறிய தென்கொரியாவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
இரு நாட்டு தலைவர்களின் 2018 உடன்படிக்கையின் ஒரு பகுதியாக வடகொரிய எல்லை நகரத்தில் அமைக்கப்பட்ட கூட்டு தொடர்பு அலுவலகத்தை வடகொரியா வெடி வைத்துத் தகர்த்த மறுநாளான நேற்று கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
"வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான தற்போதைய நெருக்கடிக்கு, தென்கொரிய அதிகாரிகளின் திறமையின்மையும் பொறுப்பற்ற தன்மையுமே காரணம். அதற்கான சரியான விலை கொடுக்கப்படும்போதே தீர்வு கிடைக்கும்," என்று கேசிஎன்ஏ குறிப்பிட்டுள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் தென்கொரிய அதிபர் மூனை கடுமையாக விமர்சித்திருந்தார்.
2018 உடன்படிக்கைகளில் எதையும் செயல்படுத்த தென்கொரியா தவறிவிட்டதாகவும் கொரிய நாடுகளுக்கிடையேயான உறவுகளை 'அமெரிக்க கைப்பாவை' ஆக்கி விட்டதாகவும் அவர் சாடினார்.
இதற்கிடையே, வடகொரியாவுடனான உறவை மேற்பார்வையிடும் தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சர் கிம் யியோன்-சுல் (படம்) நேற்று பதவி விலக முன்வந்தார்.
இருநாடுகளுக்கிடையேயான உறவு மோசமடைவதற்கு தாம் பொறுப்பேற்பதாக அவர் சொன்னதாக யோன்ஹாப் செய்தி கூறுகிறது.

