சிட்னி: ஆஸ்திரேலியாவில் கொரோனா கிருமிப் பரவல் பெருமளவு கட்டுக்குள் வந்துவிட்டாலும் இவ்வாண்டு இறுதி வரை அனைத்துலக பயணிகளுக்கான தனது எல்லை மூடப்பட்டிருக்கும் என்று அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.
ஆனால், கல்விக்காக ஆஸ்திரேலியா வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கும் நீண்ட நாள் வருகையாளர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய வர்த்தகத் துறை அமைச்சர் பிர்மின்கங் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, "வெளிநாடுகளிலிருந்து திரும்பும் மாணவர்கள் மற்றும் நீண்ட நாள் தங்க விரும்புபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்," என்று தெரிவித்தார்.
இந்நிலையில், கேன்பாரா பல்கலைக்கழகம், ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களும் வெளிநாட்டு மாணவர்களை அழைத்து வருவதற்கான சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்ய திட்டமிட்டு வருகிறது.
சுமார் 350 மாணவர்களை ஜூலை மாதத்தில் ஆஸ்திரேலியா அழைத்து வரத் திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் அந்த பல்கலைக்கழகங்கள் தெரிவித்தன.
ஆனால் எந்த நாட்டில் இருந்து மாணவர்கள் அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படவில்லை. வெளிநாட்டு மாணவர் கல்வி என்பது ஆஸ்திரேலியாவின் நான்காவது பெரிய அந்நிய செலாவணி வருவாய் ஆகும். இது ஆண்டுக்கு 38 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் மதிப்புடையதாகும்.

