வாஷிங்டன்: பெரும்பாலான அமெரிக்க நகரங்கள் பொருளாதார நடவடிக்கைகளை தொடங்கியுள்ள நிலையில், ஆறு மாநிலங்களில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அரிசோனா, ஃபுளோரிடா, ஓக்லஹோமா, ஓரிகான், நெவாடா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்கள் செவ்வாய்க் கிழமையன்று அன்றாட கிருமித் தொற்று சம்பவங்களில் புதிய உச்சத்தைப் பதிவு செய்தன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அரிசோனாவில் கிருமித் தொற்று நோயாளிகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் ஒரேயொரு படுக்கை மட்டுமே எஞ்சியுள்ளதாக மருத்துவமனையின் பிரதிநிதி ஒருவர் கூறினார். மே மாத இறுதியில் பொருளியல் நடவடிக்கைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியதும் நினைவு நாள் வார இறுதி கூட்டங்களும் கிருமித்தொற்று அதிகரித்ததற் கான காரணம் என்று பல மாநிலங்களின் சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையே கடந்த மூன்று வாரங்களாக ஜார்ஜ் ஃபிளாயிட் மரணத்திற்கு எதிராக பல மாநிலங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களில் பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டு வரும் நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

