ஆள்கடத்தல் கும்பலுக்கு உதவிய மலேசிய போலிஸ், ராணுவ அதிகாரிகள் கைது

ஆள்கடத்தல் கும்பலுக்கு உதவிய மலேசிய போலிஸ், ராணுவ அதிகாரிகள் கைது

2 mins read
be5258c2-b090-45ef-b460-e443a0794c44
குடியேறிகளைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்த 40 பேர் இம்மாதம் 4ஆம் தேதி பிடிபட்டதை அடுத்து, இந்த 18 அதிகாரிகளின் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்ததாக ஜோகூர் போலிஸ் படைத் தலைவர் அயூப் கான் மைதீன் பிச்சே தெரிவித்தார். -

ஆள்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு உதவிய குற்றத்துக்காக மலேசிய அரச போலிஸ் படை, மலேசிய ஆயுதப் படைகள் ஆகியவற்றைச் சேர்ந்த 18 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாதத்துக்கு 500 ரிங்கிட்டிருலிருந்து 1,000 ரிங்கிட் வரை லஞ்சம் வாங்கிக்கொண்டு ரகசியத் தகவல்களைக் கடத்தல் கும்பலுக்கு அவர்கள் கசியவிட்டு துரோகச் செயலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியேறிகளைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்த 40 பேர் இம்மாதம் 4ஆம் தேதி பிடிபட்டதை அடுத்து, இந்த 18 அதிகாரிகளின் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்ததாக ஜோகூர் போலிஸ் படைத் தலைவர் அயூப் கான் மைதீன் பிச்சே தெரிவித்தார்.

"கடந்த மூன்று ஆண்டுகளாக ஜோகூர் மாநிலத்தின் கிழக்குக் கடலோரப் பகுதியில் ஆள்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்த கும்பலுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் மலேசிய அரச போலிஸ் படை, மலேசிய ஆயுதப் படைகள் ஆகியவற்றைச் சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

"கைது செய்யப்பட்ட அனைவரும் 24 வயதிலிருந்து 41 வயதுக்கு உட்பட்ட ஆடவர்கள்.

"இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து மத்திய புலனாய்வுத் துறை நடத்திய அதிரடி நடவடிக்கையின் மூலம் இவர்கள் அனைவரும் சிக்கினர்," என்று ஜோகூர் போலிஸ் தலைமையகத்தில் இன்று (ஜூன்18) செய்தியாளர்களிடம் திரு அயூப் கான் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஐவர் மலேசிய ஆயுதப் படைகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் வெவ்வேறு பதவிகளை வகிப்பவர்கள்.

உதவி கண்காணிப்பாளர் பதவி வகிக்கும் போலிஸ் அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலிஸ் நடவடிக்கைகள் பற்றி கும்பலுக்கு இந்தச் சந்தேக நபர்கள் தெரிவித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக திரு அயூப் கான் கூறினார்.

குடியேறிகளையும் போதைப்பொருளையும் கடத்த அந்த சட்டவிரோத கும்பலுக்கு உதவும் வகையில் முக்கிய தகவல்களை அவர்கள் மறைத்ததாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்