ஆயிரம் பேர் வரை ஒன்றுகூடலாம், மக்கள் தாராளமாக நடமாடலாம் என அறிவிப்பு
ேதாக்கியோ: கொரோனா கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக உள்நாட்டுப் பயணத்துக்கு விதிக்கப்பட்ட எல்லாத் தடைகளையும் ஜப்பான் நேற்று நீக்கிவிட்டது. கொள்ளைநோய் நெருக்கடியால் ஏற்பட்ட பொருளியல் சீர்குலைவை சரிசெய்ய அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைக்குமாறு பிரதமர் ஷின்ஸோ அபே கேட்டுக்கொண்டு உள்ளார்.
உள்நாட்டுப் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவிட்டதால் சுற்றுலாத்தளங்கள், இசைக்கச்சேரிகள் ஆகியவற்றோடு இதர நிகழ்வுகளுக்கும் மக்கள் தாராளமாகச் செல்லலாம் என்றும் அவர் நேற்று தெரிவித்தார்.
கிருமிப் பரவல் தணிந்ததைத் தொடர்ந்து மே மாதத்திலிருந்து கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தொடங்கியது ஜப்பான். படிப்படியாக தடைகள் அகற்றப்பட்டு நேற்று முன்தினம் அவசரநிலை அறிவிப்பு மீட்டுக்கொள்ளப்பட்டது. மக்கள் வேலைக்குத் திரும்பவும் உணவகம் மற்றும் மதுபானக் கூடங்களில் பொழுதைக் கழிக்கவும் இந்த நடவடிக்கை உதவும் என்று பிரதமர் தெரிவித்தார்.
"சமூக இடைவெளியைக் கடைபிடித்த வண்ணம் மக்கள் தங்களுக்கு விருப்பமான சுற்றுலாத் தளங்களுக்குச் செல்ல வேண்டும் என்பது என் விருப்பம். மேலும் சமூக, பொருளியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட அவர்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்," என்று வியாழக்கிழமை பின்னேரத்தில் நாட்டு மக்களிடம் உரையாற்றியபோது திரு அபே கூறினார்.
உள்நாட்டுப் பயணத் தடை விலக்கிக்கொள்ளப்பட்ட அதேநேரம் உள்ளரங்கிலும் வெளியிலும் நடைபெறும் நிகழ்வுகளுக்கு ஆயிரம் பேர் வரை ஒன்றுகூடலாம் என்றும் ஜப்பானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, பயணத் தேவை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து உள்நாட்டுப் பயணச் சேவைகளைத் தொடங்கப்போவதாக ஏஎன்ஏ ஹோல்டிங்ஸ், ஜப்பான் ஏர்லைன்ஸ் ஆகிய ஜப்பானின் இருபெரும் விமான நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.
இருப்பினும் கொரோனா கொள்ளைநோய்க்கு முன்பிருந்ததைக் காட்டிலும் பாதி அளவுக்கு பயணச் சேவை இருக்கும் என்றும் அவை குறிப்பிட்டன.
அனைத்துலகப் பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் ஜப்பானில் தொடருகின்றன. சென்ற மாதம் 1,700 வெளிநாட்டினர் ஜப்பானுக்குச் சென்றனர். 1964ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆகக் குறைந்த வெளிநாட்டுப் பயணிகள் எண்ணிக்கை அது என்று ஜப்பான் தேசிய சுற்றுப் பயண அமைப்பு தெரிவித்தது.

