'உலகம் புதிய, ஆபத்தான கட்டத்தில் உள்ளது'

'உலகம் புதிய, ஆபத்தான கட்டத்தில் உள்ளது'

2 mins read
9e28f6ba-3151-4fa3-b566-86863a487499
-

கொரோனா கிருமித்தொற்று புதிய, ஆபத்தான கட்டத்தை எட்டிவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ள கிருமித்தொற்று சம்பவங்கள் புதிய உச்சத்தை எட்டியுள்ளதைத் தொடர்ந்து, மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு நாடுகளுக்கும் அவற்றின் மக்களுக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கேப்ரியேசுஸ் வலியுறுத்தியுள்ளார்.

"இந்தக் கொள்ளைநோய் வேகமாக பரவி வருகிறது. நேற்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 150,000 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன," என்று மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

இவற்றில் கிட்டத்தட்ட பாதிஅளவு சம்பவங்கள் அமெரிக்க கண்டத்தில் பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்த அவர், தெற்காசியாவிலும் மத்திய கிழக்கிலும் பெரிய எண்ணிக்கையில் புதிய சம்பவங்கள் பதிவாவதாக கூறினார்.

"உலகம் புதிய, ஆபத்தான கட்டத்தில் உள்ளது. வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் பலரும் விரக்தி அடைந்துள்ளனர். சமூக, பொருளியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதில் பல நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. எனினும், கொரோனா கிருமி வேகமாகப் பரவி வருகிறது. அது தொடர்ந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கிருமியாக உள்ளது," என்று டெட்ரோஸ் கூறினார்.

கொரோனா கிருமித்தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 8.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். கிருமித்தொற்றால் குறைந்தது 454,000 பேர் உயிரிழந்துவிட்டனர். இத்தாலியத் தலைநகர் ரோமில் புதிதாக கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து, விழிப்புடன் இருக்குமாறு அந்நாட்டின் முன்னணி சுகாதார அமைப்பு ஒன்று மக்களிடம் வலியுறுத்தியுள்ளது.

இரண்டாவது கிருமித்தொற்று அலை எழுவது குறித்து உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகாலப் பிரிவு இயக்குநர் மைக் ரயன் கூறியுள்ளார். முதல் அலை கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் அதிலும் கிருமித்தொற்று உச்சத்தை எட்டக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.