கொவிட்-19 கிருமி பரிசோதனை வேகத்தைக் குறைத்துக்கொள்ளும்படி அதிகாரிகளைத் தான் கேட்டுக்கொண்டு இருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தன் ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்.
அமெரிக்கா எந்த நாடும் இதுவரை செய்யாத அளவுக்கு 25 மில்லியன் மக்களைப் பரிசோதித்து இருப்பதாக ஓக்லஹாமா மாநிலத்தின் துல்சா நகரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.
அதிபர் டிரம்ப் மூன்று மாத காலத்தில் முதல் தடவையாக சனிக்கிழமை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டம் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்தது.
அமெரிக்காவில் அண்மையில் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவர் போலிஸ் பிடியில் உயிரிழந்ததை அடுத்து நடத்தப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் அனைத்தையும் அதிபர் கண்டித்தார், குறைகூறினார்.
அதேவேளையில், கொவிட்-19க்கு எதிராக இப்போது அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகளை அவர் தற்காத்து பேசினார்.
தன் கூட்டங்களுக்கு ஆதரவாளர்கள் வருவதை ஊடகங்கள் ஊக்குவிக்கவில்லை என்றும் அவர் குறை கூறினார். பலர் தங்களைப் பதிந்துகொண்டு பிறகு கூட்டத்துக்குச் செல்லாமல் இருந்து விட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் துல்சாவில் டிரம்ப் தேர்தல் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த குழுவில் இடம்பெற்றிருந்த ஆறு பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
துல்சா நகரில் அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் திரண்டிருந்த நேரத்தில் அந்த இடத்திற்கு அருகாமையில் இருக்கும் வேறு ஒரு இடத்தில் இனவெறி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்டவர்கள் அதிபர் டிரம்ப்பின் கொடியை எரித்தனர்.
டிரம்ப்பின் தேர்தல் பொதுக் கூட்டம் 19,000 பேர் அமரக்கூடிய உள்ளரங்கு ஒன்றில் நடந்தது.
அமெரிக்காவில் கொவிட்-19ஐ தடுப்பதற்குப் பல கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்தது முதல், உள்ளரங்கு ஒன்றில் நடந்துள்ள ஆகப் பெரிய நிகழ்ச்சி இதுதான் எனத் தெரிகிறது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

