வாஷிங்டன்: அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மேலும் 11 பேர் காயம் அடைந்ததாகவும் போலிசார் தெரிவித்தனர்.
ஒருவர் தரையில் கிடந்ததையும் அவரைச் சுற்றி இருந்த சுமார் ஒரு டஜன் பேர் மருத்துவ உதவிக் கேட்டு குரல் கொடுத்ததையும் காட்டும் நேரலைப் படங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டன.
பல கடைகளில் கண்ணாடி உடைக்கப்பட்டதையும் போலிஸ் கார்கள் சூழ்ந்து இருந்ததையும் இதர காணொளிகள் காட்டின.
12 பேர் மீது துப்பாக்கி குண்டு பாய்பந்ததாக அந்த நகர போலிசார் டுவிட்டரில் குறிப்பிட்டனர். ஆடவர் ஒருவர் மாண்டார். 11 பேர் காயம் அடைந்தனர் என்று தெரிவித்த போலிசார், மாண்டவரின் வயது முதலான விவரங்களை வெளியிடவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பில் யாராவது கைதுசெய்யப்பட்டார்களா என்பதும் தெரியவில்லை.
அமெரிக்காவில் இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. மினியாபோலிஸ் மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம்தான் அந்த ஆர்ப்பாட்டங்களுக்கான மூலக்காரணம்.
வெள்ளை இன போலிஸ் அதிகாரி ஒருவரின் பிடியில் கறுப்பினத்தவர் ஒருவர் மாண்டதால் இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இன்னமும் தொடர்கின்றன.

