வாஷிங்டன்: இந்தியாவும் சீனாவும் எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண உதவ இரு தரப்புகளோடும் அமெரிக்கா பேச்சுவாரத்தை நடத்தி வருவதாக அந்த நாட்டின் அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்தார்.
"எல்லையில் சூழ்நிலை கடுமையாகத்தான் இருக்கிறது. இந்தியாவுடன் பேசுகிறோம். சீனாவுடன் பேசுகிறோம். இரு நாடுகளுக்கும் இடையில் பிரச்சினை பெரியதாக இருக்கிறது," என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அதிபர் தெரிவித்தார்.
"இரு நாடுகளிடையே நல்ல சூழல் நிலவவில்லை. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
"எல்லைப் பிரச்சினையைத் தீர்க்கவும், பதற்றத்தைத் தணிக்கவும் சீனா, இந்தியாவுக்கு உதவுவோம். அதற்காக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது," என்று அதிபர் குறிப்பிட்டார்.
கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த திங்கள்கிழமை இந்திய-சீன ராணுவங்களுக்கு இடையே நடந்த கடும் மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர்.
சீன ராணுவ உயிரிழப்பு பற்றிய செய்தி எதுவும் தெரியவில்லை. இருந்தாலும் சீன ராணுவத் தரப்பிலும் கணிசமான உயிர் சேதம் இருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது.
எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க சீன, இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபரின் தகவல் வெளியாகி உள்ளது. சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறது. கொரோனா கிருமிப் பரவல் சிக்கலில் நாடுகள் இருக்கும்போது, இந்தியாவிடம் மட்டுமல்லாமல் பக்கத்து நாடுகளிடமும் எல்லைப் பிரச்சினையை சீனா தொடர்ந்து உருவாக்கி வருகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
ஐரோப்பா மற்றும் சீனாவுக்கான 2020 ஆம் ஆண்டு சவால்கள் என்ற மாநாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை உரையாற்றிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ, சீனாவை கடுமையாகச் சாடினார். "மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிடம் சீனாவின் மக்கள் சுதந்திர ராணுவம் தொடர்ந்து எல்லைப் பதற்றத்தை உருவாக்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் தென் சீனக் கடல் பகுதியிலும் சட்ட விரோதமாக பல பகுதிகளை சீனா கோரி வருகிறது.
அங்குள்ள உயிர்நாடியான கடல் வழிகளுக்கு சீனா மிரட்டலை ஏற்படுத்துகிறது,'' என்று அமெரிக்க அமைச்சர் பேசினார்.

