கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தபோது ராணுவ வீரர்களைக் கொன்றதாகக் கூறிய அதன் முன்னாள் துணைத் தலைவர் கருணா அம்மானை வாக்கு
மூலம் அளிக்க முன்னிலையாகுமாறு இலங்கை போலிஸ் அழைப்பானை அனுப்பியுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்குத் தளபதியாக இருந்தவர் கருணா அம்மான் எனப்படுகிற விநாயகமூர்த்தி முரளிதரன். கடந்த 2004ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மான் விலகிவிட்டார்.
அதன் பிறகு 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் தமிழ் ஐக்கிய சுதந்திரா முன்னணி எனும் கட்சியைத் தொடங்கிய கருணா அம்மான், அதில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்.
அதன்பின் மகிந்த ராஜபக்சேவின் இலங்கை சுதந்திரா கட்சியோடு கருணா அம்மான் கூட்டணி அமைத்தார்.
தற்போது இலங்கையில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ள நடாாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த வாரம் இலங்கையின் வடக்குப் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய கருணா அம்மான், "நான் கொரோனா கிருமியைவிட ஆபத்தானவன். கொரோனா கிருமியால் இலங்கையில் இதுவரை 9 பேர்தான் இறந்துள்ளார்கள்.
"ஆனால் விடுதலைப்புலிகள் அமைப்பில் நான் இருந்தபோது, ஆனையிறவில், ஒருநாள் இரவில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் இலங்கை ராணுவ வீரர்களைக் கொன்றிருக்கிறேன். கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான ராணுவத்தினரை கொன்றுள்ளோம்," எனத் தெரிவித்தார்
அண்மையில் கருணா அம்மானை விமர்சித்த கரத்தீவு உள்ளாட்சி அமைப்பின் தலைவர், கொரோனாவைக் காட்டிலும் கருணா அம்மான் ஆபத்தானவர் என்று தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலடி தரும்விதமாக பேசிய கருணா அம்மானின் இந்த கூற்று இலங்கையில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
இதையடுத்து, கருணா அம்மான் பேசியது குறித்து குற்ற விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை தலைவர் சந்தனா விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவி்த்துள்ளது.
ஆனால், கருணா பேச்சால் சிக்கலை எதிர்நோக்கியுள்ள ராஜபக்சே கட்சி, தங்கள் கூட்டணியில் கருணா கட்சி இல்லை என்று மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், கருணாவின் பேச்சுக்கு முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான விஜயவர்த்தனே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

