வாஷிங்டன்: அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையே சிங்கப்பூரில் நடந்த சந்திப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு விளம்பரமாக கருதியதாக அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறியுள்ளார்.
எனவே அர்த்தமற்ற கூட்டறிக்கையில் கையெழுத்திடவும் டிரம்ப் தயாராக இருந்ததாகவும் அவர் சொன்னார்.
டிரம்ப் நிர்வாகத்தில் தன்னுடைய 17 மாத அனுபவங்களை 577 பக்க புத்தகமாக எழுதியுள்ளார் ஜான் போல்டன்.
அந்த புத்தகத்தில் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்துள்ள போல்டன், நாட்டு நலனைவிட தன்னுடைய சொந்த நலனுக்கே டிரம்ப் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் சாடியுள்ளார்.
மேலும் கிம் உட்பட வெளிநாட்டுத் தலைவர்களை, டிரம்ப் அணுகிய விதம் குறித்தும் அவர் விவரித்துள்ளார்.
2018ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதியன்று டிரம்ப்பும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னும் சிங்கப்பூரில் முதன்முறையாக சந்தித்தனர்.
இந்த பேச்சுவார்த்தையை டிரம்ப் விளம்பரமாக கருதியதாக போல்டன் தற்போது குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பை தொடர்ந்து எதிர்த்து வந்த போல்டன், அது பெரும்பாலும் ரத்தாகிவிடக்கூடும் என்றும் அப்போது நம்பியதாகக் கூறினார்.
இச்சந்திப்பு வடகொரிய அணுவாயுத களைவு குறித்த நம்பிக்கையை எழுப்பியது என்றாலும் இரு தலைவர்களும் வெளியிட்ட கூட்டறிக்கை மிகவும் தெளிவற்றதாகவும் ஒரு உறுதியான காலக்கெடு இல்லாததாகவும் இருந்ததாக அப்போது விமர்சகர்கள் கூறியிருந்தனர்.

