செய்திக்கொத்து (உலகம்) 24-6-2020

செய்திக்கொத்து (உலகம்) 24-6-2020

2 mins read
f33d0d63-e997-4725-89b8-42462cf6710d
ஹாங்காங்கில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த 72 வயது ஆடவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படம்: ஏஎப்பி -

ஹாங்காங்கில் ஆறாவது மரணம்

ஹாங்காங்: ஹாங்காங்கில் கிருமித்தொற்றுக்கு நேற்று 72 வயது ஆடவர் பலியானதைத்தொடர்ந்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.

கிருமித்தொற்று கட்டுக்குள் இருந்த ஹாங்காங்கில் சென்ற திங்கட்கிழமை அதிக கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவானது. எனவே அங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,162ஆக உயர்ந்துள்ளனது.

மீண்டும் முடங்கியது ஜெர்மனி

பெர்லின்: இறைச்சி பதப்படுத்தும் ஆலையில் பணியாற்றிய 1,331 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதிப்படுத்தப் பட்டதால், ஜெர்மானிய அதிகாரிகள் வட்டார அளவில் மீண்டும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர்.

சுமார் 360,000 மக்கள் வசிக்கும் கெட்டர்ஸ்லோ பகுதியில் மீண்டும் நடப்புக்கு வந்துள்ள கட்டுப்பாடு வரும் 30ஆம் தேதி வரை நீடிக்கும் என்று வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாநில முதல்வர் கூறியுள்ளார்.

உலக நாடுகள் ஆஸ்துமா மருந்தை அதிகம் தயாரிக்க வலியுறுத்து

ஜெனீவா: ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான நோய்கள் உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்தப்படும் டெக்சாமெத்தசோன் மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தும் வகையில் அதிக அளவில் தயாரிக்குமாறு அனைத்துலக நாடுகளை உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

தீவிர கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் இந்த மருந்து நல்ல பலன் அளித்துள்ளதாகவும், சுவாசக் கருவி இருந்தால் மட்டுமே சுவாசிக்க முடியும் என்ற நிலையில் இருந்தவர்களிடையே 35 விழுக்காட்டு மரணத்தை இந்த மருந்து குறைத்துள்ளதாகவும் லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தெற்கிற்கு எதிராக வடகொரியா பிரசாரம்

சோல்: கொரிய நாடுகளுக்கு இடையில் பதற்றம் நிலவும் நிலையில், தென்கொரியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய பிரசாரத்தை மேற்கொள்ளும் வகையில் வடகொரியா ஒலி

பெருக்கிகளை மீண்டும் நிறுவுவதாகவும் எனவே தாங்களும் அவ்வாறு செய்ய; தயாராக உள்ளதாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது.

மேலும் தென்கொரியாவுக்கு எதிராக 12 மில்லியன் துண்டுப் பிரசுரங்களைத் தயாரித்துள்ளதாகவும் அவற்றை

3000 பலூன்களில் கட்டி அனுப்பி அந்நாட்டுக்குப் பதிலடி தரும் முடிவில் வடகொரியா உறுதியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தென்கொரியாவில் 46 பேருக்குத் தொற்று

சோல்: கிருமித்தொற்றின் இரண்டாவது அலைக்கு எதிராக போராடி வரும் தென்கொரியாவில் நேற்று புதிதாக 46 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. மே மாத தொடக்கத்தில் சமூக இடைவெளி கட்டுப்பாடு தளர்த்தப் பட்டு, பெருமளவு இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில் அங்கு கிருமித்தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ளது.