ஆஸ்திரேலியாவில் மீண்டும் அதிகரிக்கும் தொற்று

ஆஸ்திரேலியாவில் மீண்டும் அதிகரிக்கும் தொற்று

1 mins read
d7b60b28-7c08-4de1-98f1-6d1f8158084e
மெல்பர்ன் நகரில் உள்ள கடைத் தொகுதியில் கிருமித்தொற்று சோதனை நடத்தப்படுகிறது. படம்: ஏஎஃப்பி -

ஆஸ்திரேலியாவில் ஒரு மாதத்துக்குப் பிறகு கொரோனாவுக்கு முதல் நபர் பலியாகியுள்ளனர்.

மக்கள் நெரிசல்மிக்க விக்டோரியா மாநிலத்தில் முதல் மரணம் பதிவாகியுள்ளது.

கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த 80 வயது நபர் நேற்று முன்தினம் இரவு மரணமடைந்தார்.

ஆஸ்திரேலியாவில் கிருமிப் பரவல் குறைவாக இருந்தாலும் மீண்டும் அது தலைதூக்கியிருப்பதால் இரண்டாவது அலை ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

இதில் விக்டோரியா மாநிலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கொவிட்-19 சோதனைக்காக வரிசைப் பிடித்துக் காத்திருக்கின்றனர். பேரங்காடி போன்ற இடங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

விக்டோரியாவில் ஒரே இரவில் இருபது பேருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மெல்பர்னில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில தலைமை சுகாதார அதிகாரி பிரெட் சட்டன், மொத்தம் 1,900 பேர் கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

விக்டோரியாவில் புதிய சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் மற்றொரு கிருமிப் பரவல் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த மாநிலத்தில் மட்டும் இதுவரை 241 சம்பவங்கள் சமூக அளவில் பரவியுள்ளன.

இதற்கிடையே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.

புதிய சம்பவங்கள் அதிகரித்ததற்கு மிதமான அறிகுறிகள் கொண்டவர்கள் குடும்ப ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதே காரணம் என்று அதிகாரிகள் நம்பு கின்றனர். விக்டோரியாவில் அவசர நிலை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.