சுகாதாரச் சேவை பாதிப்பால் பெண்கள், குழந்தைகளுக்கு ஆபத்து

சுகாதாரச் சேவை பாதிப்பால் பெண்கள், குழந்தைகளுக்கு ஆபத்து

1 mins read
22ca2545-4074-4ca2-9408-90c7beaff307
கொரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடுகளால் 87 விழுக்காடு வழக்கமான சுகாதாரச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அதன் விளைவாக பெண்களும் குழந்தைகளுமே அதிகம் பாதிக்கப்படுவர் என்று உலகளாவிய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ் -

லண்டன்: கிருமிப் பரவல் காரணமாக வழக்கமான சுகாதாரச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் ஏழை நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று உலக வங்கியின் உலகளாவிய சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

குழந்தைகளுக்குத் தேவையான சுகாதாரப் பராமரிப்புச் சேவை, பெண்களுக்கான மகப்பேறு சேவை உட்பட பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வங்கியின் உலகளாவிய நிதிச் சேவையின் தலைவர் மோனிக் விலெடர் கூறினார்.

தடுப்பூசி போடும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது கவலையளிக்கிறது.

மருத்துவ உதவி இல்லாமல் பெண்கள் குழந்தையை ஈன்றெடுக்கின்றனர். உயிர்க்காக்கும் மருந்துகளின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது என்றார் அவர். கிருமித் தொற்றால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து 36 நாடுகளில் உள்ள ஊழியர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கொரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடுகளால் 87 விழுக்காடு வழக்கமான சுகாதாரச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதை ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன.