முன்னாள் பொதுச் சேவை உயர் அதிகாரிகள் உட்பட மக்கள் செயல் கட்சி நேற்று மேலும் 11 புதிய வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியது.
சமூக உண்டியலின் முன்னாள் நிர்வாக இயக்குநர் திருவாட்டி இங் லிங் லிங், தகவல்தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி திரு டான் கியட் ஹாவ் ஆகியோருடன் பொதுச் சேவை முன்னாள் உயர் அதிகாரிகளும் இதில் அடங்குவர் என்று கூறப்படுகிறது.
இதில் 39 வயது ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம் என்ற வழக்கறிஞர் ஆக இளைய வேட்பாளர் என்றும் பர்க்வே ஹோல்டிங்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகியான 55 வயது டாக்டர் டான் சீ லெங் ஆக வயதுடைய வேட்பாளர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் எளிமையான குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள் என்று மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் சொன்னார்.
"ஆனால், சிங்கப்பூரின் கல்வி முறையும் அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்குவது என்ற கொள்கையும் இவர்கள் சிறந்து விளங்கவும் வாழ்க்கையில் நினைத்ததை முடிக்கவும் உதவியுள்ளது.
"சிங்கப்பூர் தொடர்ந்து முன்னேற வேண்டுமெனில் இதுபோன்ற சூழலை தொடர்ந்து உருவாக்குவது சிங்கப்பூருக்கு மிகவும் முக்கியமானது," என்று திரு ெஹங் விளக்கினார்.
டாக்டர் டான் லீ செங்
இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத் துறையில் பணியாற்றி வந்துள்ள ஆக அதிக வயதுடைய வேட்பாளர். ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோங் டோங்கின் மரின் பரேட் குழுத் தொகுதியில் அவரது இடத்தை இவர் நிரப்புவார்.
டான் கியட் ஹாவ்
இவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பொதுச் சேவை ஊழியராக இருந்து முன்னோடித் தலைமுறையினருக்கான அலுவலகத்தை நிறுவியவர். அத்துடன், அைர மில்லியன் மூத்த குடிமக்களுடன் தொடர்பு கொள்ள 3,000 தொண்டூழியர்களை திரட்டியவர்.
இங் லிங் லிங்
சமூக உண்டியலின் முன்னாள் நிர்வாக இயக்குநரான திருவாட்டி இங், 6 ஆண்டுகள் வங்கித் துறையில் பணியாற்றிவிட்டு சமுதாய, பொதுச் சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம்
இவர் டெண்டன் ரோடைக் அண்ட் டேவிட்சன் சட்ட நிறுவனத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இலவச சட்ட ஆலோசனை வழங்கி வந்ததுடன் 'லீகல் எய்ட் பியூரோ' எனப்படும் சட்ட உதவிக் கழகம் சார்பாக பல வழக்குகளை ஏற்று நடத்தியுள்ளார்.
நேற்று நடைபெற்ற இரண்டாவது வேட்பாளர் அறிமுக நிகழ்வில் மக்கள் செயல் கட்சியின் துணைத் தலைவர் திரு மசகோஸ் ஸுல்கிஃப்லியும் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூவும் மேலும் சில வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தனர்.
இயோ வான் லிங்
பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் உலகளாவிய செயல்பாட்டுக் குழுவில் அங்கம் வகித்த இவர், இப்போது தன்னுரிமை பராமரிப்பாளர்களுக்கு உதவும் 'கேர்கிவர் ஏஷியா' அமைப்பை நடத்தி வருகிறார்.
எல்வின் டான் லெங் ஹுயி
திரு டான், கிரேத்தா ஆயர்-கிம் செங் தொகுதியில் டாக்டர் லில்லி நியோவின் வழிகாட்டுதலில் 2005ஆம் ஆண்டு முதல் அடித்தளத் தொண்டூழியராக சேவையாற்றி வருகிறார்.
டாக்டர் வான் ரிஸால்
ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றும் டாக்டர் வான் ரிஸால், 2010ஆம் ஆண்டிலிருந்து சமூகத்தில் தொண்டூழியராக சேவையாற்றி வருகிறார்.
எரிக் சுவா சுவீ லியோங்
பொதுச் சேவை ஆணையத்தின் கல்வி உபகாரச் சம்பளம் பெற்ற திரு எரிக், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தொடர்புத் துறையில் பட்டம் பெற்று, பின்னர் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் 3ஆம் படைப் பிரிவின் தலைவரானார்.
ரேமண்ட் லாய் ஹூங் யிப்
பொங்கோல் ஈஸ்ட் குடிமக்கள் ஆலோசனைக் குழுவின் தலைவரான திரு ரேமண்ட் லாய், கடந்த 25 ஆண்டுகளாகத் தொண்டூழியம் புரிந்து வருகிறார். தற்போது திரு லாய், புதிய செங்காங் குழுத் தொகுதியில் அடித்தளப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
போ லி சான்
சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் முன்னாள் ஹெலிகாப்டர் விமானியான திருவாட்டி போ லி சான், காலஞ்சென்ற அதிபர் எஸ்ஆர் நாதனிடம் முதல் பெண் முழுநேர கௌரவ உதவியாளராகப் பணியாற்றியவர்.
டெரிக் கோ சூன் ஹீ
டிபிஎஸ் வங்கியின் தணிக்கைப் பிரிவின் நிர்வாக இயக்குநரான திரு டெரிக் கோ சூன் ஹீ, 2013 முதல் தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்றத்தின் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்.
மக்கள் செயல் கட்சியின் 26 வேட்பாளர்களில் 19 பேர் இதுவரை அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள ஏழு பேர் இன்று அறிமுகம் செய்து வைக்கப்படுவார்கள்.

