செய்திக்கொத்து (சிங்கப்பூர்) 26-6-2020

செய்திக்கொத்து (சிங்கப்பூர்) 26-6-2020

2 mins read
f79bbb24-319c-4896-9c19-82ec1f86dcca
புதிய செங்காங் குழுத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி அணிக்கு பிரதமர் அலுவலக அமைச்சர் இங் சீ மெங் தலைமை தாங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.படம்: எஸ்டி - அரிஃபின் ஜமார் -

செங்காங் குழுத் தொகுதி மசெக அணி: இங் சீ மெங் தலைமை தாங்கக்கூடும்

புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் செங்காங் குழுத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி அணிக்கு பிரதமர் அலுவலக அமைச்சர் இங் சீ மெங் தலைமை தாங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2015ஆம் ஆண்டில் பாசிர் ரிஸ்-பொங்கோல் மசெக அணி சார்பில் போட்டியிட்ட என்டியுசியின் தலைமைச் செயலாளருமான திரு இங், தமது பொங்கோல் நார்த் தொகுதியிலிருந்து பக்கத்தில் உள்ள செங்காங்கில் போட்டியிட தயாராக உள்ளார்.

நேற்று முன்தினம் செங்காங் பகுதியில் உலா வந்த திரு இங்குடன் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின், புதிய வேட்பாளராக அறிமுகம் கண்டிருக்கும் திரு ரேமண்ட் லாய் ஆகியோருடன் உள்துறை, சுகாதார மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமினும் கலந்து கொண்டார். திரு அம்ரின் செம்பவாங் குழுத் தொகுதியில் இருந்து செங்காங் குழுத் தொகுதி அணியில் இணைந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் குரல் கட்சி 5 தொகுதிகளில் போட்டி

ஜாலான் புசார், பாசிர் ரிஸ் குழுத் தொகுதிகள், பைனியர், மவுண்ட்பேட்டன், பொங்கோல் வெஸ்ட் தனித்தொகுதிகள் ஆகியவற்றில் 12 வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று மக்கள் குரல் கட்சியின் தலைமைச் செயலாளர் திரு லிம் தியன் நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

14 நாள் வீட்டிலேயே தங்கும் உத்தரவை பெற்றுள்ள கென்னத் ஜெயரத்தினம்

இங்கிலாந்து சென்று சிங்கப்பூர் திரும்பியுள்ள சீர்திருத்தக் கட்சியின் தலைமைச் செயலாளரான 61 வயது கென்னத் ஜெயரத்னம் தாம் வீட்டில் தனிமைப்படுத்தப்படும் நாட்களை குறைக்கும்படி கேட்டுக்ெகாண்டுள்ளார்.

இதன் தொடர்பில் கட்சித் தலைவர் ஆண்டி ஸு அதி காரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி ஒன்று கூறுகிறது. வெளிநாடு சென்று திரும்பும் சிங்கப்பூரர்கள் குறிப்பிட்ட வசிப்பிடம் ஒன்றில் 14 நாட்கள் தனியாக இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இதில் ஆஸ்திரேலியா போன்ற சில குறிப்பிட்ட நாடுகளுக்குச் சென்று திரும்புவோர் அந்த 14 நாட்களை வீட்டிலேயே கழிக்க வேண்டும்.

இதற்கிடையே, வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கும் 14 நாட்களைக் குறைக்கும்படி திரு கென்னத் விடுத்த கோரிக்கையை சுகாதார அமைச்சு நிராகரித்துள்ளது என்று தேர்தல் துறை நேற்று கூறியது.