வாஷிங்டன்: அமெரிக்காவில் நாள்தோறும் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 35,900 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் புதிய சம்பவங்களுடன் சேர்த்து ஏறக்குறைய 2.4 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐம்பது மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களாகவே கொரோனா கிருமி அதிவேகத்தில் பரவி வருகிறது. இதில் டெக்சாஸ், ஃபுளோரிடா மாநிலங்களில் கிருமி கட்டுக்கடங்காமல் பரவுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 756 பேர் கொவிட்-19க்கு பலியாகிவிட்டதாக பால்டிமோரைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கூறியது.
அமெரிக்காவில் கிருமித் தொற்றால் 120,000 பேருக்கு மேல் இறந்துவிட்டனர்.
நியூயார்க், நியூஜெர்சி, கனெக்டிகட் போன்ற மாநிலங்களில் மக்கள் வெளியே செல்வதை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தங்களைத் தாங்களே 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே சீன ராணுவத்தின்கீழ் இயங்குவதாக இருபது சீன நிறுவனங்களின் பட்டியலை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
ஹுவாவெய் மற்றும் வீடியோ கண்காணிப்பு நிறுவனமான ஹிக்விஷன் உள்ளிட்ட நிறுவனங்கள் சீன ராணுவத்துக்குச் சொந்தமானதாகவோ அல்லது அதன் கட்டுப்பாட்டிலோ இருக்கலாம் என்று அது கூறியது. தேசிய பாதுகாப்பு காரணமாக ஹுவாவெய், ஹிக்விஷன் ஆகிய இரு நிறுவனங்களை அமெரிக்கா கடந்த ஆண்டு கறுப்புப் பட்டியலில் சேர்த்தது.
மற்றொரு நிலவரத்தில் அமெரிக்காவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களைப் பாதுகாக்க தேசிய பாதுகாவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளை மாளிகைக்கு அருகே உள்ள பூங்காவில் முன்னாள் அதிபர் ஆண்ட்ரு ஜாக்சனின் சிலையை ஆர்ப்பாட்டக்கார்கள் சிலர் உடைக்க முயற்சி செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே உலகம் முழுவதும் கிருமித் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இவ்வார இறுதியில் பத்து மில்லியனைத் தொடும் என்று உலக சுகாதார நிறுவனம் முன்னுரைத்துள்ளது.

