சிங்கப்பூரின் இரண்டாவது பிரதமராக 1990 முதல் 2004 வரை சேவையாற்றிய திரு கோ சோக் டோங் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார். திரு கோ, 79, நாடாளுமன்ற உறுப்பினராக 44 ஆண்டுகள் சேவையாற்றி இருக்கிறார். 2011ல் அமைச்சரவையில் இருந்து விலகிக்கொண்டார். அது முதல் அவர் கௌரவ மூத்த அமைச்சர் என்று குறிப்பிடப்படுகிறார்.
அரசியல் களத்தில் இருந்து விலகிக்கொண்டாலும் சிங்கப்பூரின் எதிர்காலத்தில் தொடர்ந்து அவர் ஈடுபாடு கொண்டிருப்பார். இதை அவர் கோடிகாட்டி இருக்கிறார்.
திரு கோ 1941ல் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்றில் பிறந்தார். உருவத்திலும் உயர்ந்திருந்த திரு கோ, அரசாங்க ஊழியராகச் சேவையாற்றத் தொடங்கி, 'நெப்டியூன் ஓரியண்ட் லைன்ஸ்' என்ற நிறுவனத்தின் தலைவரானார். 1976ல் 35வது வயதில் அரசியலுக்கு வந்தார்.
பல அமைச்சுகளுக்குப் பொறுப்பேற்றார். 1985ல் துணைப் பிரதமர் ஆனார். அதற்கு ஐந்து ஆண்டு கழித்து திரு லீ குவான் இயூவிடம் இருந்து பிரதமர் பொறுப்பேற்றார்.
"திரு லீ குவான் இயூவுக்கு பிறகும் சிங்கப்பூர் செழித்தோங்கும். இதை நான் உறுதி செய்வேன்," என்று கூறி 1990 நவம்பர் 28ஆம் தேதி பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் திரு கோ. 14 ஆண்டு காலம் பிரதமராகச் சேவையாற்றினார். 1990ல் $21,950 ஆக இருந்த தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி அவரது தலைமையின்கீழ் 2004ல் $38,000க்கும் அதிகமாகக் கூடியது.
அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுடன் தாராள வர்த்தக உடன்பாடுகளைக் கண்டார்.
சிங்கப்பூரை கருணைமிகுந்த, பெருந்தன்மையான நாடாக ஆக்க வேண்டும் என்று நம்பிக்கை கொண்டிருந்த இரண்டாம் தலைமுறை மசெக தலைவர்களுக்கு தலைமை ஏற்றிருந்த திரு கோ, அந்த இலக்கை நிறைவேற்றும் வகையில் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் பிணைப்பை புதுப்பித்து வலுப்படுத்தினார்.
செவிமடுக்கும் அரசாங்கமாக, செல்வச் செழிப்பில் மட்டுமின்றி இதயபூர்வமான அம்சங்களிலும் கவனம் செலுத்தும் அரசாக தன் அரசை அவர் கொண்டுசென்றார்.
1990களில் சிங்கப்பூரில் இந்தியா பற்றிய எண்ணத்தைக் கிளப்பிவிட்டார். பல தடவை அந்த நாட்டிற்குச் சென்று வந்தார். ஆசியானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் அணுக்க உறவு வேண்டும் என்று அரும்பாடுபட்டார். இந்தியா-சிங்கப்பூர் பரந்த பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாடு பூர்த்தியாக பெரும் முயற்சி மேற்கொண்டார். ஆசியான் ஒற்றுமைக்கு அரும்பாடுபட்டார்.
உலகின் பல வட்டாரங்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான சிங்கப்பூரின் முயற்சிகளுக்குத் தலைமை தாங்கினார்.
பலரையும் கவர்ந்தார்
தலைமைத்துவ மாற்றம் தொடர வேண்டும் என்பதற்கான வியூகங்களை வகுத்துச் செயல்பட்டார். தற்காப்பு அமைச்சராகப் பணியாற்றியபோது சிங்கப்பூர் ஆயுதப் படையில் ஒரு தலைவராக இருந்த திரு லீ சியன் லூங்கை அடையாளம் கண்டு அரசியலுக்கு வருமாறு அவரை இணங்கச் செய்தார்.
திரு லீ 1984ல் தேர்தலில் போட்டியிட்டார். அவரை மட்டுமல்ல. மூன்றாம் தலைமுறைத் தலைவர்கள் பலரையும் அரசியலுக்குக் கொண்டு வந்தவர் திரு கோ.
முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் இயோ, மூத்த அமைச்சர்களான டியோ சீ ஹியன், தர்மன் சண்முகரத்னம், போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ் ணன், லிம் ஹங் கியாங், பேராசிரியர் யாக்கூப் இப்ராஹிம், லிம் சுவீ சே ஆகியோர் அவர்களில் அடங்குவர்.
சிங்கப்பூரர்கள் அரசியல் பற்றிய தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதற்காக கருத்தறியும் பிரிவை உருவாக்கியவர் திரு கோ.
வரவுசெலவுத் திட்ட உபரியைக் கொண்டு அறக்கட்டளை நிதி ஒன்றை ஏற்படுத்தி வசதி குறைந்த சிங்கப்பூரர்களுக்கு நிதி ஆதரவு கிடைக்க வகை செய்தார்.
வரவுசெலவுத் திட்ட உபரியை மக்களின் மத்திய சேம நிதிக் கணக்கில் பணம் நிரப்புதல் மூலம் அதை அவர்களுக்கு முதன்முதலாக பகிர்ந்து அளிக்கத் தொடங்கியதும் திரு கோவின் அரசாங்கம்தான்.
அடித்தள நிலையில் சமூக மேம்பாட்டு மன்றங்களை, அனைத்து சமய நன்னம்பிக்கைக் குழுக்களை, நல்லிணக்கக் குழுக்களை அமைத்து இன, சமூகப் பிணைப்பை வலுப்படுத்த திரு கோ முயன்றார்.
அரசு நாடாளுமன்ற குழுக்கள், நியமன நாடாளுமன்ற உறுப்பினர் முறை போன்ற அரசியல் புதினங்களைத் திரு கோ மேற்பார்வை செய்தார். அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று அதன் விளைவாக பொருளியல் நெருக்கடி ஏற்பட்டிருந்த போதிலும் 2001 தேர்தலில் மக்கள் செயல் கட்சி 75 விழுக்காட்டு வாக்குகளுடன் இவரது தலைமைத்துவத்தின் கீழ் வெற்றி பெற்றது.
சகாப்தம் முடிகிறது
திரு கோவுடன் பாட்டாளிக் கட்சியின் முன்னாள் தலைவர் லோ தியா கியாங்கும் அரசியல் தேர்தல் களத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.
இந்த அறிவிப்புகள் பல சிங்கப்பூரர்களைப் பொறுத்த வரையில் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிப்பதாகவே இருக்கிறது என்று அதிபர் ஹலிமா யாக்கோப் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளது இங்கு நினைவுகூரத்தக்கது.
அதிபர் ஹலிமா யாக்கோப் 20 ஆண்டுகளுக்கு முன் அரசியலில் ஈடுபட காரணமாக இருந்தவரும் திரு கோ என்பதும் குறிப்பிடத்தக்கது. திரு கோவின் குணநலன்களையும் தொண்டுகளையும் கருணையுடன் அவர் செவிசாய்த்த பாணியையும் பிரதமர், அமைச் சர்கள், எம்பிக்கள் முதல் பொதுமக்கள் வரை பலரும் பெரிதும் பாராட்டி இருக்கிறார்கள்.

