'தேர்தலில் மசெகவின் ஐவன் லிம் போட்டியிடவில்லை'

'தேர்தலில் மசெகவின் ஐவன் லிம் போட்டியிடவில்லை'

2 mins read
a2cf5fb4-2097-4bb3-839e-865e45d29244
இணையத்தில் தம்மைப் பற்றி வலம்வரும் விமர்சனங்கள் தொடர்பில்மக்கள் செயல் கட்சியின் புதிய வேட்பாளர் ஐவன் லிம் நேற்றுஅறிக்கை வெளியிட்டார். படம்: மக்கள் செயல் கட்சி -

மக்கள் செயல் கட்சியின் புதிய வேட்பாளர்களுள் ஒருவராக அறிவிக்கப்பட்ட ஐவன் லிம், பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளார். தேர்தலிலிருந்து விலகிக்கொள்ளும் அவரது முடிவை கட்சி ஏற்றுக்கொண்டுள்ளதாக நேற்றிரவு கூறப்பட்டது.

திரு லிம்முக்கு எதிராகப் பல்வேறு விமர்சனங்கள் இணையத்தில் எழுந்துள்ள நிலையில், அவற்றின் தொடர்பில் நேற்று காலை திரு லிம் தெளிவுபடுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இருப்பினும் தொடர்ந்து ஆதாரமற்ற பல குற்றச்சாட்டுகள் அவர் மீது கூறப்பட்ட நிலையில் அவர் இம்முடிவுக்கு வந்ததாக கட்சியின் தலைமைச் செயலாளர் மற்றும் பிரதமர் லீ சியன் லூங்குக்கு அவர் தெரிவித்திருந்தார்.

தம் பெயரில் எழுந்துள்ள சர்ச்சைகள் தேர்தலின் முக்கியத்துவத்தைப் பாதிக்கக்கூடும் என்றும் இதனால் தமது குடும்பத்தாருக்குத் துன்பமும் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூரின் எதிர்காலம் மற்றும் கொவிட்-19 நெருக்கடியிலிருந்து மீண்டுவருவதற்கான கடினமான படிகள் போன்ற விவகாரங்களே இத்தேர்தலில் முக்கியத்துவம் வகிக்கவேண்டும் என்றும் தாம் அறிவதாக அவர் தெரிவித்தார்.

தம் குடும்பம் மேலும் துன்பத்துக்கு ஆளாகக்கூடாது என்பதால் தாம் இம்முடிவை எடுத்ததாகவும் இது தொடர்பில் கட்சியின் தலைவர்களுடன் கலந்தாலோசித்துவிட்டதாகவும் அவர் கூறினார். கட்சியில் பணியாற்ற வாய்ப்பளித்ததற்காக அவர் தம் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து திரு லிம் தேர்தலிலிருந்து விலகிக்கொள்ளும் முடிவைத் தாம் ஏற்றுக்கொள்வதாகப் பதிலளித்திருந்தார் பிரதமர் லீ.

திரு லிம்மைப் பற்றி எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து விசாரணை மேற்கொள்ள போதிய அவகாசம் இந்தப் பிரசார காலத்தில் இல்லை என்று குறிப்பிட்ட பிரதமர் லீ, திரு லிம்முக்கும் அவரது குடும்பத்துக்கும் நேர்ந்த நிலை குறித்து வருத்தம் தெரிவித்தார்.

அவரின் முடிவைத் தாம் மதிப்பதாகவும் திரு லிம்மும் அவரது குடும்பத்தாரும் அமைதி பெற சிங்கப்பூரர்கள் வாய்ப்பளிப்பர் என்று தாம் நம்புவதாகவும் கூறினார். சமூகத்திற்கு திரு லிம்மின் பங்களிப்பு தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சியின் சார்பாக போட்டியிடும் 27 புதிய வேட்பாளர்களில் ஒருவராக திரு லிம் புதன்கிழமையன்று அறிமுகப்படுத்தப்பட்டார்.

அதைத் தொடர்ந்து அவரை அறிந்திருந்ததாகக் கூறிய சிலர், திரு லிம்மைப் பற்றி இணையத்தில் பலவாறாகக் கருத்து பதிவிட்டனர்.

தம்மைப் பற்றி திரு லிம் மிக உயர்வாக எண்ணிக்கொள்பவர் என்றும் அவரிடம் ஆணவம் அதிகம் உள்ளது என்றும் இணையக் கருத்துகள் வலம் வந்தன.