தேர்தல் துளிகள் (28-6-2020)

தேர்தல் துளிகள் (28-6-2020)

3 mins read
73a559af-57eb-4b19-a5f8-102cc349a707
மெக்பர் சன் உணவு நிலையத்தில் ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் முகமது ஹமிம் அலியாஸும் மக்கள் சக்தி கட்சியின் கோ மெங் செங்கும் சந்தித்தனர். -

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி கருத்து

தேசிய தொலைக்காட்சியில் அரசியல் ஒளிபரப்பிற்காக முன்கூட்டியே உரைகளை சமர்ப்பிக்க வேண்டியது குறித்து சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி (பிஎஸ்பி) கவலை தெரிவித்துள்ளது. தஞ்சோங் பகார் குழுத் தொகுதியில் கட்சியின் நிர்வாகச் செயலாளரும் வேட்பாளருமான திரு மைக்கல் சுவா, தனது உரைகளை 48 மணி நேரத்திற்கு முன்பே சமர்ப்பிக்க வேண்டியது "கவலைக்குரியது" என்றும், ஒளிபரப்பிற்கு முன்னர் உள்ளடக்கங்கள் கசிந்து விடக்கூடும் என்று கவலைப்படுவதாகவும் கூறினார்.

தமது குழு வேட்பாளர் டெரன்ஸ் சூன், கட்சி உறுப்பினர் லீ சியன் யாங் ஆகியோருடன் 55 வயதான சுவா, ஹாலந்து வில்லேஜில் நேற்று மக்களைச் சந்தித்தபோது ஊடகங்களு டன் பேசினார். பாரம்பரியமான பிரசாரக் கூட்டங்களில் வேட்பாளர்கள் தங்கள் கருத்துகளை நேரடியாக மக்கள் முன்வைப்பார்கள். தற்போது தொலைக்காட்சி பிரசார உரைகளை விளக்க வரிகள் (சப்-டைட்டல்) தயாரிக்க அதிகாரிகளிடம் முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. மற்றவர்களும் இவற்றைப் பார்க்க வாய்ப்புள்ளது. இது கட்சிக்கு சங்கடத்தை அளித்துள்ளது என்றார் அவர்.

சீர்திருத்தக் கட்சி: சிறப்பான, நியாயமான சிங்கப்பூர்

'சிறப்பான, நியாயமான சிங்கப்பூரை மீண்டும் உருவாக்குவோம்' என்ற இந்தப் பொதுத் தேர்தலுக்கான தனது பிரசார முழக்கத்தையும் கட்சி அறிக்கையையும் சீர்திருத்தக் கட்சி நேற்று அறிவித்துள்ளது.

இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் பொருள் சேவை வரியை ரத்து செய்வது, உணவு, மருந்து, பொதுப் பயனீடு போன்ற முக்கியமானவற்றுக்கு இவ்வரியை நீக்குவது, வேலையிழந்தோர், மூத்தோர், குறைந்த வருமான குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு உதவித் தொகை, உலகளாவிய மருத்துவப் பராமரிப்பு, தேசிய சேவை செய்தோருக்கு இலவச பல்கலைக்கழகக் கல்வி, குறைந்த பட்ச ஊதியத்தை மணிக்கு $10 ஆக உயர்த்துவது, வேலை அனுமதிக்கான சம்பள உச்சவரம்பை $5,000 ஆக அதிகரிப்பது போன்றவை கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இதன் மூலம், மேல்தட்டு மக்களுக்கு மட்டுமின்றி, அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் நியாயமான, சிறந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க விழைவதாகக் கட்சி குறிப்பிட்டது.

ஜனநாயக முற்போக்குக் கட்சி விலகல்

ஜனநாயக முற்போக்குக் கட்சி (டிடிபி) பொதுத் தேர்தலில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தது. சீர்திருத்தக் கட்சி, மக்கள் சக்தி கட்சி (பிபிபி) உடனான அறிவிக்கப் படாத கூட்டணிக்கு கட்சி ஆதரவளிக்கும் என்று அதன் பொதுச்செயலாளர் கோ மெங் செங் நேற்று மெக்பர்சனில் சுற்றுலா வந்தபோது கூறினார். சிங்கப்பூர் முதல் (சிங்ஃபர்ஸ்ட்) கட்சி கலைக்கப்பட்ட நிலையில், தற்போது பொதுத் தேர்தலில் போட்டியிட 10 எதிர்க்கட்சிகள் உள்ளன.

கோ மெங் செங்: இதுவே கடைசி

மக்கள் சக்திக் கட்சியில் (பிபிபி) பொதுச்செயலாளர் கோ மெங் செங், 50, பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடுவது இதுவே இறுதியாக இருக்கும் என்று நேற்று கூறினார்.

மெக்பர்சன் ஈரச்சந்தை, உணவு மையத்தில் மக்களைச் சந்தித்த பின் ஊடகங்களுடன் பேசிய அவர், ஆரம்பத்தில் 15 ஆண்டுகள் அல்லது மூன்று தேர்தல் காலங்களுக்கே அரசியலில் இருக்க திட்டமிட்டதாகக் கூறினார். இது அவரது நான்காவது தேர்தல். இம்முறை மெக்பர்சன் தனித் தொகுதியில் போட்டியிடும் அவர் மக்கள் செயல் கட்சியின் டின் பெய் லிங்கை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.