அரசியல் நன்கொடை சான்றிதழுக்கு 226 விண்ணப்பம்

அரசியல் நன்கொடை சான்றிதழுக்கு 226 விண்ணப்பம்

2 mins read
cd5e7255-b741-4b70-bf74-64fd89e6aa6f
படம்: கோப்புப்படம், எஸ்டி -

ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்காக 226 பேர் அரசியல் நன்கொடை சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் துறை நேற்று தெரிவித்துள்ளது. இதற்கான காலக்கெடு வெள்ளிக்கிழமையுடன் முடிந்தது.

பொதுவாக பல கட்சிகள் கூடுதலான அல்லது தற்காப்புக்காக சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கும் என்றாலும், இந்த எண்ணிக்கை நாடாளுமன்றத்தில் 93 இடங்களுக்கு அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடக்கூடும் என்பதாகத் தெரிகிறது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் அரசியல் நன்கொடை சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதில், மற்ற பல விவரங்களுடன் தாங்கள் பெற்ற அரசியல் நன்கொடைகளைக் குறிப்பிட்டு அவை சட்டத்திற்குட்பட்டவை என்பதையும் குறிப்பிட வேண்டும்.

அரசியல் நன்கொடைகளுக்கான பதிவாளர் வேட்பு மனு தாக்கலுக்கு முதல் நாளன்று வழங்கும் அந்தச் சான்றிதழைப் பெற, இந்த எழுத்துபூர்வத் தகவல்கள் அவசியம். வேட்பு மனு தாக்கல் நாளாக அறிவிக்கப்பட்டுள்ள ஜூன் 30, செவ்வாய் அன்று வேட்பு மனுவுடன் இந்த சான்றிதழையும் வேட்பாளர்கள் இணைக்க வேண்டும்.

முன்மொழிபவர், வழிமொழிபவர் ஆகியோருடன் ஆதரவு தெரிவிக்கும் நால்வரும் (குறைந்தபட்சம்) வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் செல்ல வேண்டும்.

இவர்கள் அனைவரும் வேட்பாளர் போட்டியிடும் தொகுதியில் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

அரசியல் நன்கொடை சான்றிதழ் பெற 37 மலாய் இனத்தவரும் 35 இந்தியர் மற்றும் சிறுபான்மை இனத்தவரும் விண்ணப்பித்திருப்பதாக தேர்தல் துறை தெரிவித்தது.கடந்த தேர்தலில் மொத்தம் 220 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.

ஒவ்வொரு குழுத்தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒரு வராவது மலாய் இனத்தவராகவோ அல்லது இந்திய மற்றும் சிறுபான்மை இனத்தவராகவோ இருக்க வேண்டும். குழுத்தொகுதியின் தேவைக்கேற்ப அது முடிவு செய்யப்படலாம்.