மலேசியாவில் திடீர் தேர்தலை நடத்த வலுக்கும் கோரிக்கை

2 mins read
2aff96d7-ac6a-4d97-8441-9b8871cbbd56
மலேசியாவில் கொரோனா நெருக்கடியால் மூடப்பட்டிருக்கும் காலைநேரச் சந்தைகள், இரவுச் சந்தைகள், பொதுச் சந்தைகள் ஜூன் 15ஆம் தேதி செயல்படத் தொடங்கும் என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் கூறினார். படம்: ஏஎப்பி -

கோலாலம்பூர்: மலேசியாவில் திடீர் தேர்தலை நடத்த, அந்நாட்டுப் பிரதமர் முகைதீன் யாசினின் கூட்டணிக்குக் கோரிக்கை வலுத்து வருகிறது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் தேர்தலை நடத்த ஆளும் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் உள்ள சிலர் விரும்புவதாக அறியப்படுகிறது. அவ்வாறு நடந்தால், ஜூலையில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் அரசாங்கத்திற்குப் பெரும்பான்மை இருப்பது நிரூபிக்கப்படுவதற்கு முன்னதாகவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுவிடும்.

தேர்தல் நடத்தப்படுவதன் மூலம் ஆளும் கூட்டணியின் ஆதிக்கம் நிரூபிக்கப்படும் என அக்கூட்டணியின் ஆகப் பெரிய கட்சியான அம்னோ நம்புகிறது.

இவ்வாண்டு மார்ச் மாதம் பிரதமர் பொறுப்பை திரு முகைதீன் ஏற்று மூன்று மாதங்களே நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்கான தனது தயார்நிலையை அம்னோ தெரியப்படுத்தியுள்ளது.

மலேசியாவில் 2023ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டிற்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இதற்கிடையே, கிழக்கு மலேசியாவின் சாபா மாநில முதல்வர் ஷஃபி அப்டாலின் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

"பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஆட்டங்கண்டிருப்பதைத் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி விரும்புகிறது," என்று அக்கூட்டணியைச் சேர்ந்த பிரமுகர் கூறினார்.

முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மதுவுக்கும் திரு அன்வார் இப்ராகிமுக்கும் இடையே கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, திரு ஷஃபியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த டாக்டர் மகாதீர் ஆதரவு அளித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, டாக்டர் மகாதீர், திரு அன்வார் இருதரப்புக்கும் இடையே கடைசிவரை சமரசம் எட்டப்படாவிடில், தேர்தலில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடும் சாத்தியம் நிலவக்கூடும் என்று பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியைச் சேர்ந்த பிரமுகர்கள் கருதுவதாக தகவல்கள் கூறுகின்றன.