இன்னோர் வூஹான் நகரமாக உருவெடுக்கும் பெய்ஜிங்

இன்னோர் வூஹான் நகரமாக உருவெடுக்கும் பெய்ஜிங்

2 mins read
a822f538-313a-48ee-926a-b2104aca65bc
-

பெய்ஜிங்: சீனாவின் இன்னோர் வூஹானாக உருவெடுத்து வருவதாக நம்பப்படும் பெய்ஜிங்கில் கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக கடுமையான முடக்க உத்தரவுகள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள நிலையில், மெத்தனமாக இருந்துவிடக்கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் சீன நகரமான வூஹானில் தொடங்கிய கிருமி பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது பெய்ஜிங் மற்றும் அதன் அண்டை மாநிலமான ஹிபெயிலும் நூற்றுக் கணக்கானவர்களுக்குக் கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று பேசிய சீன சுகாதாரத் துறை அதிகாரிகள், பெய்ஜிங்கிற்கு அருகில் உள்ள ஆன்ஸின் கவுண்டி முற்றிலும் முடக்கப்பட்டு, வூஹானில் கொண்டு வரப்பட்டதைப் போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

எனவே, அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டிற்கு ஒருவர், நாளொன்றுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே சென்று வரமுடியும் என்று தொற்றுநோய் பணிக்குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சுமார் 500,000 பேர் வீட்டிலேயே அடைபட்டு கிடக்கின்றனர். பெய்ஜிங்கில் நேற்று முன்தினம் 14 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவானதையடுத்து, இம்மாதத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 311ஆக உயர்ந்தது.

எனவே கிருமித்தொற்று மீண்டும் பெருமளவு தலைதூக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இம்மாத மத்தியில் முதன்முதலாக பெய்ஜிங்கின் ஃஸின்பாடி இறைச்சி மற்றும் காய்கறி சந்தையில் கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. அப்போதைய சூழலில், அங்கு உடனடியாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஆன்ஸின் கவுண்டியில் உறுதி செய்யப்பட்ட 12ல் 11 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் ஃஸின்பாடி சந்தையோடு தொடர்புடையவை. இதையடுத்து, சந்தை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்கள், வர்த்தகர்களிடையே கிருமித்தொற்று பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 83,500 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.