செங்காங் குழுத்தொகுதி: இங் சீ மெங் தலைமையில் மசெக

செங்காங் குழுத்தொகுதி: இங் சீ மெங் தலைமையில் மசெக

2 mins read
dfbea150-2351-458f-81a1-d8d344dfe412
புதிய செங்காங் குழுத்தொகுதியில் என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தலைமையில் மக்கள் செயல் கட்சி அணி களமிறங்குகிறது. படம்: எஸ்டி, திமத்தி டேவிட் -

வரும் பொதுத் தேர்தலில் புதிய செங்காங் குழுத்தொகுதியில் என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தலைமையில் மக்கள் செயல் கட்சி அணி களமிறங்குகிறது. பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திரு இங், நேற்று கம்பஸ்வேல் பகுதியில் சுற்றுலா மேற்கொண்டார்.

போக்குவரத்து, சுகாதார மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின், உள்துறை மற்றும் சுகாதார அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின், வழக்கறிஞர் ரேமண்ட் லாய் ஆகியோர் திரு இங்குடன் தொகுதிச் சுற்றுலாவில் பங்கெடுத்துக்கொண்டனர்.

அந்த நால்வரும் செங்காங் குழுத்தொகுதி டி-சட்டை அணிந்திருந்தனர். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் செங்காங் குழுத்தொகுதியில் என்னென்ன சாதனைகள் இடம்பெறும் என்பது பற்றி அவர்கள் பேசினார்கள்.

செங்காங்கில் இளைஞர்கள் அதிகம் வசிக்கிறார்கள். ஆகையால் இளம் குடும்பங்களிடம் தன் குழு கவனம் செலுத்துவதாக திரு இங், 51, குறிப்பிட்டார்.

வேலை வாய்ப்புகள் முக்கியமான அம்சம் என்று கூறிய அவர், மக்களுக்குப் புதிய பல வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்றார். புதிய சமூக மன்றங்கள், நீர்நிலை விளையாட்டுத் இடங்கள் முதலானவை அவற்றில் அடங்கும்.

திரு லாய், 54, முதியோருக்குத் தங்குதடையில்லாத நடமாட்ட வசதிகள், கூரையுடன் கூடிய இணைப்பு வழிகள், மூத்த குடிமக்கள் உடற்பயிற்சி நிலையங்கள் போன்றவற்றை ஏற்படுத்துவது, தான் ஒருமித்த கவனம் செலுத்தக்கூடிய துறைகளில் ஒன்று என்றார்.

கொவிட்-19 சூழலில் வேலை இழந்தவர்கள் மீண்டும் வேலை பெற உதவுவதில் தான் ஒருமித்த கவனம் செலுத்தப் போவதாக திரு அம்ரின், 41, குறிப்பிட்டார்.

செம்பவாங் வாழ்க்கைத் ெதாழில் நிலையம் வேலை வாய்ப்புகளைக் கண்டறிந்து மக்களுக்கு உதவும் என்றார் அவர்.

மக்கள் செயல் கட்சியின் முதலாம் தலைமைச் செயலாளரும் துணைப் பிரதமருமான ஹெங் சுவீ கியட் நேற்றைய தொகுதிச் சுற்றுலாவில் கலந்துகொண்டார்.

நேற்றைய சுற்றுலாவில் கலந்துகொண்ட நால்வரும் செங்காங் குழுத்தொகுதியில் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்களா என்று கேட்டதற்கு, வேட்பு மனுத் தாக்கல் நாளன்று எல்லா விவரங்களும் தெரியவரும் என்றும் அதுவரை பொறுமையாக இருங்கள் என்றும் திரு ஹெங் குறிப்பிட்டார்.

இந்தத் தேர்தலில் புதிதாக ஏற்படுத்தப்பட்டு உள்ள செங்காங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சிக்கும் எதிர்த்தரப்புக்கும் கடும் போட்டி இருக்கும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகிறார்கள்.

இத்தொகுதியில் பாட்டாளிக் கட்சி போட்டியிடுமெனத் தெரிகிறது.