வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படை வீரர்களை தலிபான் பயங்கரவாதிகள் கொன்றால் அவர்களுக்கு ஆயுத, பண உதவி செய்வதாக ரஷ்ய உளவு அமைப்பு கூறியதாக தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தியை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து மார்ச் மாத இறுதியில் நடந்த ஒரு உள்அமைப்புக் கூட்டத்தில் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு மன்றத்தில் விவாதித்ததாகவும் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வெள்ளை மாளிகை இதை பற்றி எதுவும் கூறவில்லை.
ரஷ்யாவின் தலையீடு தெரிந்தும் அந்நாட்டிற்குத் தடை விதிக்காதது அல்லது அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காதது வெட்க கேடானது என்று டிரம்ப்பைக் கடுமையாக விமர்சித்துள்ளார் அதிபர் வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பைடன்.
இந்த விவகாரம் பூதாகாரம் ஆகி வரும் நிலையில் ரஷ்யா இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என தெரிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டு இருநாட்டு ராஜதந்திர உறவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாக அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் நடத்த தாங்கள் தயாரித்த ஆயுதங்களையே பயன்
படுத்துவதாக தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

