பாகிஸ்தானில் தாக்குதல்: 11 பேர் பலி

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச் சந்தையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்கு தலில் 11 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. மாண்டவர்களில் தாக்குதலை நடத்திய நான்கு பயங்கரவாதிகளும் அடங்குவர்.

இந்தத் தாக்குதல் நேற்று நிகழ்ந்தது. காரில் வந்து இறங்கிய அந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிகளையும் கையெறி குண்டு களையும் வைத்திருந்ததாகவும் பாகிஸ்தானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பங்குச் சந்தைக்குள் அவர்கள் கையெறி குண்டை வீசியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். அதனைத் தொடர்ந்து, துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்தனர்.

அவர்கள் நடத்திய இந்தத் திடீர் தாக்குதலில் பாதுகாவலர்கள் நால்வர், ஒரு போலிஸ் அதிகாரி, பொதுமக்களில் இருவர் ஆகியோர் மாண்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகள் நால்வரையும் சுட்டுக் கொன்றனர். பயங்கரவாதிகள் வைத்திருந்த துப்பாக்கிகளையும் கையெறி குண்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி தடுப்பு போட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.