300 பிள்ளைகளுக்கு கொவிட்-19 தொடர்பிலான அரிய வகை அழற்சி நோய்

கொரோனா கிருமித்தொற்றோடு தொடர்புடைய அரிய,  பிள்ளைகளின் உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடிய எம்ஐஎஸ்-சி நோய்க்கான அறிகுறிகள் அமெரிக்காவில் 300 பேரிடம் கண்டறிப்படுள்ளது. 

பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் கொவிட்-19 நோயாளிகளிடையே  எம்ஐஎஸ்-சி நோய்க்குறி உள்ளதாக வெளியான அறிக்கைகளைத் தொடர்ந்து தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட இரண்டு அமெரிக்க ஆய்வுகளில் அது குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்ஐஎஸ்-சி எனப்படும் குழந்தைகள் அழற்சி நோய் காய்ச்சல், உடலில் தடிப்புகள், வீங்கிய சுரப்பிகள் போன்ற கவாசாகி நோய்க்கான அறிகுறிகளைக் கொண்டிருக்கும்.

பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனை நடத்திய முதல் ஆய்வில் 186 பேரிடம் எம்ஐஎஸ்-சி நோய் கண்டறியப்பட்டதாகவும் அவர்களில் ஐந்தில் நால்வருக்குத் தீவிர சிகிச்சை தேவைப்பட்டதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மாநில சுகாதாரத் துறை நியூயார்க்கில் மேற்கொண்ட மற்றோர் ஆய்வில் 95 பேருக்கு அழற்சி நோய் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறு பிள்ளைகள் முதல்  21 வயதிற்குட்பட்ட இளையர்கள் வரை 100,000 பேரில் இருவரை அழற்சி நோய் தாக்குவதாகவும் அந்த 100,000 பேரில் 322 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.