இன்னொரு நெருக்கடி; புதிய வகை தொற்றுநோய் பரவும் அபாயம்: சீன ஆய்வாளர்கள்

கொரோனா கிருமித்தொற்றின் அச்சுறுத்தல் இன்னும் நீங்காத நிலையில், புதிய வகை கிருமியால் இன்னொரு தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளதாக சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் தேசிய அறிவியல் இதழில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பன்றிகளில் பரவி வரும் இந்த புதிய வகை கிருமி, தொற்று நோயைத் தூண்டும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது மரபணு ரீதியாக எச்1என்1 கிருமியில் இருந்து உருவாகியுள்ளது.

இந்த புதிய வகை கிருமி ஜி4 என அழைக்கப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் சீன இறைச்சிக் கூடங்களில் உள்ள பன்றிகளிடம் சோதனை மேற்கொண்டதில், அவை ஜி4 கிருமியால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி பன்றிகளில் இருந்து மனிதர்களுக்கு இந்த கிருமி பரவியிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

இறைச்சி கூடங்களில் இருக்கும் பன்றிகளைக் கையாளும் தொழிலாளர்களில் சுமார் 10.4 விழுக்காட்டினருக்கு ஜி4 கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம், ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்குப் பரவுவதற்கான சாத்தியம்   குறித்து இன்னும் நிரூபிக்கப்படவில்லை. 

இருப்பினும் விலங்குகளிடம் அதிக தொடர்பில் இருப்பவர்களைக் கண்காணிக்க அவசர நடவடிக்கைகள் தேவை என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகளில் உள்ளவர்கள், குறிப்பாக பன்றித் தொழிலில் உள்ள தொழிலாளர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படவேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.