டெஹ்ரான்: ஈரானியத் தலைநகர் டெஹ்ரானுக்கு வடக்கே அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடிப்பில் 19 பேர் உயிரிழந்ததோடு குறைந்தது அறுவர் காயமுற்றனர். உயிரிழந்தவர்களில் 13 பேர் பெண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
எரிவாயுக் கசிவு காரணமாக வெடிப்பு ஏற்பட்டதாக டெஹ்ரான் துணை ஆளுநர் ஹமீது ரேஸா கௌடார்ஸி அரசு தொலைக்காட்சியிடம் கூறினார்.
அந்த மருந்தகம் அமைந்துள்ள இடத்தில் பலமுறை வெடிப்பு ஏற்பட்டதைச் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஒன்று காட்டியது. எனினும், அந்தக் காணொளியின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை.
இலேசான அறுவை சிகிச்சைகள், மருத்துவப் பரிசோதனைகள் இந்த மருந்தகத்தில் செய்யப்படுகின்றன. வெடிப்பு ஏற்பட்ட சமயத்தில் அங்கு 25 ஊழியர்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெஹ்ரானில் சில நாட்களுக்கு முன்பு ராணுவத் தளம் ஒன்றில் பெரிய வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இந்த மருந்தகத்தில் வெடிப்பு ஏற்பட்டது.

