மியன்மார் மரகதக்கல் சுரங்கத்தில் நிலச்சரிவு; குறைந்தபட்சம் 100 பேர் உயிரிழப்பு

மியான்மர் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள கச்சின் மாநிலம், ஹபாகந்த் பகுதியில் உள்ள ‘ஜேட்’ எனப்படும் மரகதக்கல் சுரங்கத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100க்கு உயர்ந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே கனமழை காரணமாக நிலப்பகுதி ஈரமாக இருந்ததால் நிலச்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. 

304 மீட்டருக்கும் அதிகமான உயரத்திலிருந்து மண் சரிந்து சுரங்கத்தில் விழுந்ததாகவும் அதில், மரகதக் கற்களைச் சேகரித்துக்கொண்டிருந்த பல தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டதாகவும் தகவல் அமைச்சு தெரிவித்தது.

தீயணைப்பு, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை சுமார் 100 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online