சிமுக: குதிரைப் பேரத்தில் ஈடுபடவில்லை

2 mins read
72c39430-7f7d-4ed4-86a9-b8d716bff99f
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் உதவித் தலைமைச் செயலாளர் திரு லியோங் முன் வாய். -

நீ சூன் குழுத் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிக்கும் சீர்திருத்தக் கட்சிக்கும் இடையே எவ்வித குதிரைப் பேரமோ பேச்சுவார்த்தையோ நடைபெறவில்லை என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் உதவித் தலைமைச் செயலாளர் திரு லியோங் முன் வாய் தெளிவுப்படுத்தியுள்ளார்.

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி நீ சூன் குழுத் தொகுதியில் அரைமனதுடன் போட்டியிடுவதாக காணொளி மூலம் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறி இருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் திரு லியோங் தந்த விளக்கம் அமைந்தது.

இம்மாதம் 10ஆம் தேதி நடைபெறும் பொதுத் தேர்தலில் நீ சூன் குழுத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி அணிக்கு திரு சண்முகம் தலைமை தாங்குகிறார்.

நீ சூன் குழுத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை சீர்திருத்தக் கட்சியிடம் ஒப்படைத்துவிட்டு அக்கட்சியிடமிருந்து வேறொரு தொகுதியைப் பெற சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி முயன்றதாக திரு சண்முகம் தெரிவித்தார்.

ஆனால் இதை சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி வேட்பாளரான 53 வயது பிராட்லி போயர் மறுப்பது நேர்மையற்ற செயலாகும் என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் திரு சண்முகம் நேற்று பதிவிட்டார்.

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி வேட்பாளர் பொய் சொல்வதற்கான காரணத்தை நீ சூன் குடியிருப்பாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை அவர்கள் தரப்பிலிருந்து பதில் ஏதும் வராவிட்டால் தமது வேட்பாளர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதில் டாக்டர் டான் செங் போக் உறுதியாக இருக்கிறாரா என்பது தெரிய வரும்," என்றார் திரு சண்முகம்.

அமைச்சர் சண்முகம் முன்வைத்த இக்கருத்துக்கு திரு லியோங் நேற்று ஃபேஸ்புக் மூலம் பதிலளித்தார்.

"நீ சூன் குழுத் தொகுதியின் மீது சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி கடப்பாடு கொண்டிருக்கிறது. எங்களுக்கும் சீர்திருத்தக் கட்சிக்கும் இடையே நீ சூன் குழுத் தொகுதி தொடர்பாகவோ அல்லது மற்ற தொகுதிகள் தொடர்பாகவோ எவ்வித குதிரைப் பேரமோ பேச்சுவார்த்தையோ நடைபெறவில்லை.

"போட்டியிடுவதற்கு ஒருசில தொகுதிகளே உள்ளன. ஆனால் அவற்றில் போட்டியிட பல எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் எவ்வித குதிரைப் பேரத்திலும் நாங்கள் ஈடுபடவில்லை.

"இந்தப் பொதுத் தேர்தலுக்கு எங்களது நீ சூன் குழுத் தொகுதி அணி கடந்த பல மாதங்களாக தயார் செய்துவந்துள்ளது. நீ சூன் குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துவதுதான் முக்கியம்," என்று திரு லியோங் தெரிவித்தார்.