பொருள் சேவை வரி உயர்த்தப் படுவது அவசியம் என்றாலும் வரியின் தாக்கத்திலிருந்து மக்களில் பெரும்பாலானோரை அரசாங்கத்தின் நிதி ஆதரவு பாதுகாப்பதாக பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா கூறியுள்ளார்.
அதிகரிக்கும் பொருள் சேவை வரி பற்றிய விமர்சனங்கள் பொதுத்தேர்தல் நேரத்தில் எழுந்துள்ள வேளையில், வரி உயர்வுக்கான காரணங்கள் ஏற்கெனவே விளக்கப்பட்டிருப்பதாக நேற்று தஞ்சோங் பகாரில் தொகுதி உலா சென்ற பிறகு தமிழ் முரசிடம் சொன்னார் குமாரி இந்திராணி.
பொருள் சேவை வரி உயர்வின் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக ஒற்றுமைக்கான வரவு செலவுத் திட்டத்தில் 6 பில்லியன் வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கியிருப்பதை குமாரி இந்திராணி நினைவுபடுத்தினார்.
"இந்த ஏற்பாட்டினால் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு பெரும்பாலான சிங்கப்பூரர்கள் பாதுகாக்கப்படுவர். அத்துடன் வருமானம் குறைந்த சிங்கப்பூரர்கள் குறைந்தது 10 ஆண்டுகளுக்குப் பாதுகாக்கப்படுவர். அதாவது, ஜிஎஸ்டியின் நிதி பாரத்தை உயர் வருமான வர்க்கத்தைச் சேர்ந்த சிங்கப்பூரர்களும் வெளிநாட்டினரும் சுமக்கப் போகின்றனர்," என்றார்.
சுகாதார தேவைகளே வரியின் உயர்வுக்கான முக்கிய காரணம் என்பதையும் குமாரி இந்திராணி தெரிவித்தார். 2030ஆம் ஆண்டுக்குள் மக்கள் தொகையில் கால் பங்கினர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பர் என முன் னுரைக்கப்படுவதாகக் கூறிய குமாரி இந்திராணி, வயது ஆக ஆக மக்களுக்கு மருத்துவ பராமரிப்பு, மருத்துவமனை வசதிகள் போன்றவை அதிக அளவில் தேவைப்படும் என்று கூறினார். இந்த வரி உயர்வால் ஏற்படும் ஆதாயம், வயதானவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பயன்படும் என்றும் குமாரி இந்திராணி சொன்னார்.
"இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அதிக அளவில் பிறந்த குழந்தைகள் இப்போது மூப்படைந்து வருகின்றனர் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். சுகாதாரச் செலவு மீண்டும் மீண்டும் ஏற்படும் செலவு என்பதால் அதற்கு ஈடான வருவாய் ஜிஎஸ்டி மூலம் தொடர்ந்து திரட்டப்பட வேண்டும்." என்று அவர் கூறினார்.
இந்தியர்களின் நிலை உயர்ந்துள்ளது
சிங்கப்பூரில் இந்திய இனத்தவரின் நிலையைப் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த குமாரி இந்திராணி, கடந்த பத்தாண்டுகளில் இந்தியர்கள் பொதுவாக கல்வித் தகுதியிலும் சராசரி வருமானத்திலும் ஏற்றம் கண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
பாலர் பள்ளிகளில் சேரத் தவறும் இந்திய இனத்தவரின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகக் கூறிய அவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட 'ஹலோ பேபி' திட்டத்தின் வழி, இந்தியச் சமூகத்தில் பிள்ளைகளுடன் பிறப்பிலிருந்தே தொடர்பை வளர்த்துக்கொள்ள சிண்டா முயல்வதைச் சுட்டினார். அத்துடன், கணித பாடத்தில் குறைந்த வருமான குடும்பங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் தேர்ச்சி பெறும் விகிதமும் அதிகரித்திருப்பதை குமாரி இந்திராணி சுட்டினார்.
இதற்கிடையே, இன அடிப்படையிலான அறநிறுவனங்களும் உதவி அமைப்புகளும் சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதாக எதிர்க்கட்சி வேட்பாளர் ஒருவர் கூறியதற்குப் பதிலளித்த குமாரி இந்திராணி, இத்தகைய அமைப்புகளின் செயல்பாடு நிச்சயம் தேவை என்று கூறினார்.
"நடைமுறை யதார்த்தங்களை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். உதவித் தேவைப்படுபவருக்குத் தெரிந்த மொழியையோ அவரது கலாசார வழக்கங்களைத் தெரியாமலோ எப்படி அவருக்கு முழுமையாக உதவ முடியும்? இன அடிப்படையிலான அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்தான் இதைச் சரியாகச் செய்ய முடியும். உதவி தேவைப் படுவோரை உயர்த்தி அவரை ஒட்டு மொத்தச் சமூகத்துடன் இணைப்பதுதான் சிண்டா போன்ற அமைப்பு களின் நோக்கம். மேலும், 'பிக் ஹார்ட்ஸ்' மாணவர் பராமரிப்பு நிலையத்தில் சிண்டா, மெண்டாக்கி, சிடிஏசி அமைப்புகள் சேர்கின்றன. எனவே பிளவு என்பதற்கான பேச்சுக்கு இடமே இல்லை," என்றார்.

