இணையம் வழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறனுக்கும் எதிரான சட்ட (பொஃப்மா) அலுவலகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யும்படி கேட்டு விண்ணப்பிக்க தான் திட்டமிடுவதாக சிங்கப்பூர் ஜனநாயகக்கட்சி நேற்று தெரிவித்தது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் தலைமை நிர்வாகி சியோங் கூன் ஹியன், 2018ல் ஐபிஎஸ்- நாதன் விரிவுரை ஆற்றியபோது, சிங்கப்பூர் மக்கள் தொகை 2030ல் 10 மில்லியனாகும் என்று குறிப்பிட்டதாக சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, மக்கள் குரல் கட்சி ஆகியவற்றின் ஃபேஸ்புக் பக்கங்களிலும் இதர இரண்டு ஃபேஸ்புக் பக்கங்களிலும் இடம்பெற்றிருந்த தகவல் தொடர்பில் திருத்தம் வெளியிடும்படி பொஃப்மா அலுவலகம் உத்தரவிட்டு இருந்தது.
தனக்கு இந்த உத்தரவு வந்ததாகவும் அதை ஏற்று தேசிய வளர்ச்சி அமைச்சு குறிப்பிட்டதைப் போல் தான் திருத்தம் வெளியிட்டு உள்ளதாகவும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி உறுதிப்படுத்தியது.
இருந்தாலும் பொஃப்மா அலுவலகம் எடுத்த முடிவு ஆட்சேபிக்கத் தக்கது என்று கட்சி தெரிவித்தது. ஆகையால் இந்த உத்தரவை ரத்து செய்யும்படி கேட்டு மனுச் செய்ய தான் திட்டமிட்டுள்ளதாகவும் கட்சி தெரிவித்தது.
"பொஃப்மா சட்டத்தின்படி அந்த உத்தரவுக்கு நாங்கள் கீழ்ப்படிய வேண்டி இருக்கிறது. இருந்தாலும் அந்த உத்தரவை ரத்து செய்யும்படி நாங்கள் மனுசெய்வோம்," என்று கட்சி தெரிவித்தது.
தேர்தலில் போட்டியிடும் சிங்கப் பூர் ஜனநாயகக் கட்சி, மக்கள் குரல் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளின் இணையத் தளங்களுக்கு சிங்கப்பூரின் போலி செய்திகளுக்கு எதிரான சட்டத்தின்கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவு இதர இரண்டு ஃபேஸ்புக் பக்கங்களுக்கும் ஓர் இணையத் தளத்திற்கும் அனுப்பப்பட்டது. வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் தலைமை நிர்வாகியான டாக்டர் சியோங், 2018 விரிவுரையில் அத்தகைய தகவல் எதையும் தெரிவிக்கவில்லை என்று பொஃப்மா அலுவலகம் சனிக் கிழமை தெரிவித்து இருந்தது.
தேசிய வளர்ச்சி அமைச்சின் மாற்று அமைப்பு என்ற முறையில் பொஃப்மா அலுவலகம் அந்த உத்தரவைப் பிறப்பித்தது.
ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும் தவற்றைத் திருத்தும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள பயனீட்டாளர்கள் அனைவருக்கும் திருத்த அறிவிப்பை வெளியிட வேண்டும்.
சிங்கப்பூரின் மக்கள்தொகை திட்டங்களை பலமுறை அரசாங்கம் தெளிவுப்படுத்தி இருப்பதாக பொஃப்மா குறிப்பிட்டது.
இருந்தாலும் பொய்ச் செய்திகள் திரும்பத்திரும்ப இடம்பெற்று வருவதை அது சுட்டியது. இத்தகைய பொய்ச் செய்திகள் நேர்மையான, நியாயமான விவாதிப்புகளைக் கீழறுப்பதன் மூலம் பொதுமக்களின் நாட்டத்தை கெடுத்துவிடும் என்பதால் இத்தகைய செய்திகள் மேற்கொண்டும் இடம்பெற்றால் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டி இருக்கும் என்று அந்த அலுவலகம் தெரிவித்தது.

