ஹாலந்து-புக்கிட் தீமா குழுத் தொகுதியிலும் புக்கிட் பாஞ்சாங் தனித் தொகுதியிலும் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள், தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் நகர நிர்வாகத்திற்காகத் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவர் என்று கூறியுள்ளனர்.
ஆனால் இரு தொகுதிகளையும் மசெக தக்கவைத்துக்கொள்ள முடியாத சூழலில் புக்கிட் பாஞ்சாங் நகர், வெவ்வேறு அரசியல் கட்சிகளின்கீழ் இரு வேறு நகர மன்றங்களால் நிர்வகிக்கப்படும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
புக்கிட் பாஞ்சாங் தனித் தொகுதிக்காக மசெகவின் திரு லியாங் எங் ஹுவாவும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் பால் தம்பையாவும் போட்டியிடுகின்றனர்.
புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தின் சில பகுதிகள் ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதிக்குக் கீழ் அமைந்துள்ளன.
திரு லியாங் தேர்வானால், அவரே ஹாலந்து-புக்கிட் பாஞ்சாங் நகர மன்றத்தின் அடுத்த தலைவர் ஆவார் என்று கூறப் படுகிறது.
தேர்தலில் அவர் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் புக்கிட் பாஞ்சாங் தனித் தொகுதியை வேறொரு நகர மன்றம் நிர்வகிக்கும்.
அப்போது குடியிருப்பாளர்கள் சில வேறுபாடுகளை உணர்வர் என்று திருவாட்டி சிம் அன் கூறினார்.
தேர்தலில் இவர் ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதிக்கான மசெக அணியில் சிஜகவுக்கு எதிராக களம் இறங்குகிறார்.

