குவைத்தில் இருந்து 800,000 இந்தியர் வெளியேறும் நிலை

குவைத்தில் இருந்து 800,000 இந்தியர் வெளியேறும் நிலை

2 mins read
9492e86a-68e6-4ba5-99e7-79f4d5cb3fa0
குவைத்தில் அந்த நாட்டு மக்களே சிறுபான்மையினர் அளவுக்குக் குறைவாக இருப்பதால் வெளிநாட்டினரைக் குறைத்துக்கொள்ள குவைத் விரும்புகிறது. படம்: ஏஎப்பி - யாசர் அல்-ஸயாட் -

குவைத்: மத்திய கிழக்கு நாடான குவைத்தின் தேசிய பேரவை, நகல் மசோதா ஒன்றை அங்கீகரித்து இருக்கிறது.

குவைத் நாட்டுக்குள் வெளிநாட்டினர் எந்த அளவுக்கு இருக்கவேண்டும் என்பதை அந்த மசோதா வரையறுக்கிறது. அதன்படி மக்கள்தொகையில் இந்தியர்களின் எண்ணிக்கை 15 விழுக்காட்டைத் தாண்டக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் 8 லட்சம் இந்தியர்கள் குவைத்தைவிட்டு வெளியேற வேண்டி இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

தேசிய பேரவையின் சட்ட மற்றும் நீதித்துறைக் குழு, அந்த நகல் மசோதா அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டது என்று தீர்மானித்து இருப்பதாக கல்ஃப் நியூஸ் என்ற செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

உள்ளூர் ஊடக செய்தி ஒன்றை மேற்கோள் காட்டி அந்தச் செய்தித்தாள் செய்தி வெளியிட்டு இருக்கிறது. நகல் மசோதா குறிப்பிட்ட ஒரு குழுவிடம் அனுப்பிவைக்கப்படும். அதனையடுத்து பரந்த அளவிலான திட்டம் உருவாக்கப்படும்.

அந்த மசோதா சட்டமாகும்போது சுமார் 800,000 இந்தியர்கள் குவைத்தைவிட்டு வெளியேற வேண்டி இருக்கும் என்று கல்ஃப் நியூஸ் தெரிவித்துள்ளது.

குவைத்தில் உள்ள வெளிநாட்டு சமூகத்தினரில் இந்தியர்கள்தான் அதிகம். அந்த நாட்டில் மொத்தம் 1.45 மில்லியன் இந்தியர்கள் வேலை பார்ப்பதாக, வசிப்பதாகத் தெரிகிறது.

குவைத் மக்கள் தொகை 4.3 மில்லியன். அவர்களில் 3 மில்லியன் பேர் வெளிநாட்டினர்.

கொவிட்-19 பரவல் காரணமாக குவைத்தில் வெளிநாட்டினரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று அரசாங்க அதிகாரிகளும் தேசிய பேரவை உறுப்பினர்களும் குரல்கொடுத்து வருகிறார்கள்.

நாட்டின் மக்கள்தொகையில் வெளிநாட்டினர் அளவு 70 விழுக்காடாக இருக்கிறது.

இதை 30 விழுக்காடாகக் குறைக்க வேண்டும் என்று குவைத் பிரதமர் ஷேக் ஷபா அல் காலித் அல் ஷபா சென்ற மாதம் தெரிவித்ததாக அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்டது.

குவைத்தில் இந்தியர்களுக்கு அடுத்தபடியாக எகிப்தியர்கள் அதிகமாக இருக்கிறார்கள். குவைத்தில் உள்ள வெளிநாட்டினரில் எகிப்தியர்கள் 10 விழுக்காட்டினர்.

எகிப்தியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் குவைத் முயல்கிறது. குவைத்தில் வேலை பார்க்கும் இந்தியர்கள் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கும் பணம் மிகவும் அதிகம். குவைத்தில் இருந்து 2018ல் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட தொகை $4.8 பில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் அந்த நாட்டு மக்களே சிறுபான்மையினர் அளவுக்குக் குறைவாக இருப்பதால் வெளிநாட்டினரைக் குறைத்துக்கொள்ள குவைத் விரும்புகிறது.

எண்ணெய் விலைகள் படுமோசமாக குறைந்து இருப்பதும் குவைத் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்குவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.