கொரோனா கிருமி காற்று மூலம் பரவும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கடிதம்

கொரோனா கிருமி காற்று மூலம் பரவும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கடிதம்

2 mins read
c7bdb1e5-3f8a-4977-9ee3-607fd0698b0e
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதையடுத்து, லண்டனில் உள்ள சோஹோ பகுதியில் கடந்த சனிக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது. படம்: ஏஎஃப்பி -

கொரோனா கிருமி காற்று வழியாக பரவுவதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், நோய்த் தடுப்பு பரிந்துரைகளை திருத்தி வெளியிடுமாறும் உலக சுகாதார நிறுவனத்துக்கு 239 நிபுணர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

உலகம் முழுவதும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வரும் கொரோனா கிருமி, மனிதர்கள் பேசும்போது, தும்மும்போது, இருமும்போது தெறிக்கும் எச்சில் துளிகள் மூலம் மற்றவர்களுக்குப் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

கிருமித்தொற்று கண்டவர்கள் பயன்படுத்திய இடங்களையோ அல்லது பொருட்களையோ பயன்படுத்தினாலும் கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல், முகக்கவசம் அல்லது முகக்காப்பு அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்றவை இந்த கிருமித்தொற்றைக் குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா கிருமி காற்று வழியாக பரவுவதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக 32 நாடுகளை சேர்ந்த 239 நிபுணர்கள் உலக சுகாதார நிறுவனத்துக்கு கடிதம் எழுதியிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

"கொரோனா குறித்த அண்மைய ஆய்வுகளில், அது காற்று வழியாக பரவுவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே இந்த நோய்த்தடுப்பு பரிந்துரைகளை திருத்தி வெளியிட வேண்டும்," என அந்த கடிதத்தில் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

கொரோனா கிருமி காற்றின் மூலம் பரவுவது நிரூபணமானால், உள்ளரங்குகளிலும் முகக்கவசங்களைப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகலாம்.

சுகாதார பணியாளர்களுக்கு மிகச்சிறிய துகள்களையும் தடுக்கும் என்95 வகை முகக்கவசம் தேவைப்படும்.

வீடுகளில் மிகச்சிறிய துகள்களில் மிதக்கும் நோய்க்கிருமிகளை கொல்வதற்கு புற ஊதா விளக்குகள் தேவைப்படலாம் என்றும் நிபுணர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

முகக்கவசம் அணிவது, பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற நடவடிக்கைகள் ஏற்கெனவே சிங்கப்பூரில் நடப்பில் இருப்பதையும் சிங்கப்பூர் நிபுணர்கள் சுட்டியுள்ளனர்.

ஆனால் கொரோனா கிருமி காற்று மூலம் பரவுவதாக நிபுணர்கள் கூறுவதை நம்பமுடியாது என உலக சுகாதார நிறுவனத்தின் நோய்த்தொற்று கட்டுப்பாட்டின் தொழில்நுட்பப்பிரிவு தலைவர் டாக்டர் பெனிடெட்டா அலிகிரான்சி கூறியுள்ளார்.

"அதை உறுதிப்படுத்துவதற்கான வலுவான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இது தொடர்பாக வலுவான வாதங்கள் நடந்து வருகிறது," என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்