மலேசிய மாமன்னர், அரசியார் ஆகிய இருவரையும் பற்றி இரண்டாவது முறையாக அவதூறு பேசிய இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட ஷரில் மொஹமட் சரிஃப் என்பவருக்கு 10 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
37 வயதான ஷரிலின் ஒவ்வொரு குற்றத்திற்கும் தலா 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அவை இரண்டையும் அவர் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு ஷரில் புன்னகைத்ததாகக் கூறப்பட்டது.
தமக்கு மனநிலை சரியில்லை என்று குறிப்பிட்ட ஷரில், தண்டனையாக அபராதம் விதிக்கும்படி நீதிமன்றத்தில் கோரினார். ஆனால், அவரது மனநிலை பற்றி எந்த ஒரு அறிக்கையையும் அவர் சமர்ப்பிக்கவில்லை.
மலேசியாவின் எட்டாவது பிரதமர் பதவியேற்றபோது, நேரலையில், இஸ்தானா நெகரியின் இன்ஸ்டகிராம் கணக்கில் ஷரில் அந்த அவதூறு பதிவுகளை வெளியிட்டார் என்று கூறப்பட்டது.
இவர் இதற்கு முன்னரும் மாமன்னரைப் பற்றி அவதூறு பேசிய குற்றத்திற்காக இரண்டு மாத சிறைத் தண்டனை அனுபவித்தது குறிப்பிடத்தக்கது.

