தர்மன் சண்முகரத்னம் இளமை காலத்திலேயே அரசாங்க இடையீட்டு முயற்சிகள் வேண்டும்

தர்மன் சண்முகரத்னம் இளமை காலத்திலேயே அரசாங்க இடையீட்டு முயற்சிகள் வேண்டும்

2 mins read
9e0b817c-ad21-44f4-8438-b9b3cf6184a6
சிங்கப்பூரர்களின் இளமைக் காலத்திலிருந்தே அரசாங்கத்தின் சமூக முன்னேற்றத் திட்டங்கள் தொடங்கிட வேண்டும் என்று மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார். -

சிங்கப்பூரர்களின் இளமைக் காலத்திலிருந்தே அரசாங்கத்தின் சமூக முன்னேற்றத் திட்டங்கள் தொடங்கிட வேண்டும் என்று மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.

வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள் பலவற்றைப் பின்னோக்கிப் பார்த்தால், ஒருவரின் பிள்ளைப் பருவம் அதற்குக் காரணமாக இருப்பதை அறியலாம். இதனால் சிங்கப்பூரர்கள் சிறு வயதாக இருக்கும்போதே, சமூக முன்னேற்றம் தொடர்பான அரசாங்கத்தின் முயற்சிகளைத் தொடங்கிவிட வேண்டும் என்று அவர் நேற்று நடைபெற்ற மசெக உரை நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார்.

எத்தகைய பின்னணியிலிருந்து வரும் பிள்ளையானாலும் பள்ளியில் சிறந்து விளங்க ஆழமான இடையீடுகள் ஆரம்பக் காலத்தில் மிக முக்கியமானவை என்றார் அவர்.

"குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள், வாழ்க்கையில் நம்பிக்கையுடன், உற்சாகத்துடன் தொடக்கப் பள்ளிக்குள் அடியெடுத்து வைக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்," என்றார் திரு தர்மன். சமுதாய கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு தர்மன், "இது சாத்தியம்," என்று தெரிவித்தார்.

பாலர் பள்ளி கல்வித் தரத்தை உயர்த்துவது, பாலர் பள்ளி ஆசிரியர்களின் பயிற்றுவிப்புத் தரத்தை உயர்த்துவது போன்றவற்றுடன் பிள்ளை வளர்ப்பு தொடர்பிலான 'கிட்ஸ்டார்ட்' திட்டம் குறித்தும் அவர் பேசினார்.

இத்திட்டத்தின்கீழ் சத்துணவு, பெற்றோர்-பிள்ளை உறவு போன்ற பிள்ளை வளர்ப்பின் வெவ்வேறு அம்சங்கள் குறித்து குடும்பங்களுக்கு ஆலோசனையும் ஆதரவும் வழங்கப்பட்டு வருகின்றன.

இன்னும் கூடுதலான ஆசிரியர்கள், ஆலோசகர்கள் ஆகியோர் ஒவ்வொரு பிள்ளைக்கும் ஆதரவாக இருப்பதற்கென நியமிக்கப் படுவர் என்றும் கூறினார் திரு தர்மன்.

அத்துடன் உலகின் தலைசிறந்த கல்வி அமைப்புமுறைகளைக் கொண்ட நாடுகளுள் சிங்கப்பூரும் ஒன்று என்று அவர் சுட்டினார். முன்னேற்றமடைந்த நாடுகளில் உள்ள வசதிகுறைந்த பிள்ளைகளைக் காட்டிலும் சிங்கப்பூரின் வசதிகுறைந்த பிள்ளைகள் கல்வியில் சிறப்பாகச் செய்து வருவதாக அவர் சொன்னார்.