வேலை தேடும் சிங்கப்பூரர்களுக்கு உதவுவதில் அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வர, மற்ற சிங்கப்பூரர்களும் தங்களது திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று ஹாலந்து-புக்கிட் தீமா குழுத் தொகுதியின் மசெக வேட்பாளர் திருவாட்டி சிம் ஆன் (படம்) தெரிவித்தார். அண்மையில் கிளமெண்டி பகுதியில் வீவக வீடுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களைச் சந்தித்த திருவாட்டி சிம் ஆன், தமிழ் முரசுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
தற்போதைய கொவிட்-19 கிருமித்தொற்று சூழலில் மின்னிலக்கத் திறன்களின் முக்கியத்துவத்தை எவரும் மறுத்திட முடியாது என்று சுட்டிய திருவாட்டி சிம் ஆன், எதிர்காலத்தில் இத்தகைய மின்னிலக்கத் திறன்களும் ஆற்றல்களும் வேலையிடங்களில் அதிகம் மதிப்பிடப்படும் என்றார்.
இக்கட்டான இந்தச் சூழலிலிருந்து மீண்டு வருவதில்தான் அரசாங்கத்தின் கவனம் உள்ளது என்றும் சில வழிமுறைகள் அசெளகரியமாகத் தோன்றினாலும் மக்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்காக இந்தக் கடினமான முடிவுகள் எடுக்கப்படுவதை மக்கள் உணர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஹாலந்து-புக்கிட் தீமா வட்டாரம் பசுமையான இயற்கைச் சூழலை நிலைநாட்டும் வகையில் ரைஃபிள் ரேஞ்ச் இயற்கைப் பூங்காவின் புதுப்பிப்புப் பணிகளும் ரயில் பாதையின் மறுசீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருவாட்டி சிம் ஆன் சொன்னார்.
அனைவருக்கும் ஒரு பாதுகாப்பான சூழல் அவசியம் என்பதால் புதிய வசதிகள், குறிப்பாக மக்கள் ஒன்றுகூடும் இடங்களை உருவாக்கும்போது, நோய்ப் பரவல் தடுப்பு அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும் என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் தேர்தல் வேட்பாளர்களின் மீது அவதூறான கருத்துகள் பதிவாகி வரும் விவகாரம் குறித்து, அது சமநிலை இல்லாத களமாக அமைந்துவிடுகிறது என்று திருவாட்டி சிம் ஆன் குறிப்பிட்டார்.
இருப்பினும், இத்தளங்களைப் பயன்படுத்தி மக்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள முன்வர வேண்டும்.
அவர்கள் ஆக்ககரமான கருத்துகளை அங்கு பகிர்ந்துகொள்ளலாம், நல்ல காரியங்களுக்கும் சமூக ஊடகங்கள் உதவும் என்றார் திருவாட்டி சிம் ஆன்.

